மதுரை மருத்துவமனையில் புதிய தொழில் நுட்பத்தில் மூளை கட்டி அறுவை சிகிச்சை
மதுரை மருத்துவமனையில் புதிய தொழில் நுட்பத்தில் மூளை கட்டி அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
இந்திய அளவில் முதன் முறையாக புதிய தொழில் நுட்பத்துடன் மூளைக் கட்டி அறுவைச் சிகிச்சை செய்து மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை விரகனூர் சுற்றுச் சாலையில், உள்ள ஹானா ஜோசப் டாக்டர்கள் இந்திய அளவில் முதன் முறையாக புதிய தொழில் நுட்பத்துடன் மூளை அறுவை சிகிச்சை நடத்தி சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து, ஹானா ஜோசப் மருத்துவமனை தலைவர் மற்றும் முதுநிலை மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டர் அருண்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாங்கள் மூளை கட்டிகளை அகற்றுவதற்கு பிரைன்லேப் என்ற புதிய மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம். இந்த தொழில் நுட்பத்தின் வாயிலாக, மூளை கட்டிகள் துல்லியமாக கண்டறிந்து அகற்றப்படுகிறது.
அதன் பின்பு நோயாளிக்கு முறையான கதிர் இயக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. எங்களுடைய மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மூன்று நோயாளிகளுக்கு இந்தியாவில் முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மூளைக்கட்டி அறுவை சிகிச்சை நடத்தி சாதனை படைத்துள்ளோம்.
இந்த அறுவை சிகிச்சையால், நோயாளிகளுக்கு எந்தவித பக்க விளைவுகள் ஏற்படாமல் மூளைக்கட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையில் நரம்பியல் நிபுணர்கள், கதிரியக்க நிபுணர்கள், செவிலியர்கள் ஆகியோர் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
இந்த புதிய அறுவை சிகிச்சையில், மைக்ரோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மூளைக்கட்டி அகற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக மூளையின் நரம்பு தண்டுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட பத்து நாட்களில் நோயாளிகள் இயல்பு நிலைக்கு திரும்பு கின்றனர்.இதனால், நோயாளிகளுக்கு எவ்வித நரம்பியல் குறைபாடுகளும் ஏற்படுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பிரைன் லேப் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த விபாசிங், டாக்டர் அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் பங்கேற்று பிரைன் லேப் தொழில்நுட்பத்தை விளக்கி பேசினர். இதற்கான ஏற்பாடுகளை மார்க்கெட்டிங் தலைமை அதிகாரி சேகர் செய்து இருந்தார்.