மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் கைது
மதுரை எல்லீஸ் நகரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
மதுரையில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
அண்மையில், சென்னையில் நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசியது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இதனைக்கண்டிக்கும் வகையில் பாஜக,இந்து முன்னணி அமைப்பினர் என, பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோரை கண்டித்தும் உடனடியாக இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என, தமிழக முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி,மதுரை எல்லீஸ் நகரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே, பாஜக போராட்டம் அறிவித்த நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை மாநகர் பாஜக மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பாஜகவினர் நடத்திய இந்த போராட்டத்தினால் எல்லீஸ் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.