மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி: முன்னாள் அமைச்சர்

Update: 2023-06-21 14:00 GMT

அதிமுக சார்பில் மதுரை கிராஸ் ரோடு பகுதியில் திருமலை நாயக்கர் சிலை அருகில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்ஷா போன்றோரின் தற்கொலை போல, செந்தில்பாலாஜியின் நாடகமும் அதற்கான ஒத்திகை தான் என தோன்றுகிறது என்றார் அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது செல்லூர் ராஜு .

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க கோரியும் , விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றை கண்டித்து, அதிமுக சார்பில் மதுரை கிராஸ் ரோடு பகுதியில் திருமலை நாயக்கர் சிலை அருகில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.இந்த விடியா திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசுகையில்: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெறுகிறது, ஆனால் ,அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது, செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றி வருகிறார். அதிமுக இன்னும் ஒராண்டில் ஆட்சிக்கு வர போகிறது, திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராக உள்ளனர் என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், அதிமுகவில் இருந்து செந்தில் பாலாஜி சென்றதால் அரசியல்வாதி எனும் தகுதியை இழந்து விட்டார். டாஸ்மாக்கில் ஒரு நாளுக்கு ஒரு கோடி என 2 வருடத்தில் 7,200 கோடி  ஊழல் செய்து உள்ளார் .

செந்தில் பாலாஜி, ஊழல் குறித்து கேட்ட நமக்கே நெஞ்சுவலி வருகிறது. ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வராதா?, சென்னை மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் முதல்வர் கலைஞர் கோட்டம் திறக்க திருவாரூர் சென்று விட்டார். முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் பெயரை கலைஞர் நாடு என மாற்றுவார். தமிழ்நாட்டு மக்கள் முதல்வர் ஸ்டாலின் கோபமாக இருக்கிறார்கள். அதனால் தான் குடியரசு தலைவர், பீகார் முதல்வர் போன்றவர்கள் கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு வரவில்லை. செந்தில் பாலாஜி வாயை திறந்தால் முதல்வர் வீட்டுக்கு போய் விடுவார்.

செந்தில் பாலாஜியை தொடர்ந்து, அடுத்ததடுத்து ரெய்டுகள் வரும். அதிமுக - பாஜக கூட்டணியை ராஜ்நாத் சிங் சென்னையில் நிகழ்ச்சியில் உறுதி செய்து விட்டார். அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் ஒரு பைசா கூட மின்சார கட்டணம் உயர்த்தவில்லை. திமுக ஆட்சி வீட்டுக்கு போகும் வரை அதிமுகவினர் உறங்க கூடாது என பேசினார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு  நிறைவுறையாற்றி பேசுகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் படும் துன்பங்கள் தெரிகிறதா? தெரியவில்லையா?, கருணாநிதி காலம் தொட்டு திமுக பொய்யை சொல்லியே ஆட்சிக்கு வந்துள்ளது.  கருணாநிதி காலத்தில் நம்முடைய ஜீவாதார உரிமைகளை விட்டு கொடுத்தார். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.புதுவிதமாக கஞ்சா மிட்டாய் விற்பனைக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் 3,600 பார்கள் லைசென்ஸ் இல்லாமல் நடந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி வசமாக மாட்டி கொண்டார். செந்தில் பாலாஜி தன்னை பாதுகாத்து கொள்ள நெஞ்சுவலி என ,சொல்லவில்லை. அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்ஷா போன்றோரின் தற்கொலை நாடகம் போல, செந்தில்பாலாஜியின் நாடகமும் அதற்கான ஒத்திகை தான் என தோன்றுகிறது. பைபாஸ் சர்ஜரிக்கு 3 நாள் ஓய்வு போதும். ஆனால், இவர்கள் 3 மாதம் ஓய்வு கேட்பதை பார்த்தால் சந்தேகமாக தான் இருக்கிறது, அமைச்சர் பி.டி.ஆர். சொன்ன 30,000 கோடி விவகாரம் தான் இப்படி சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது. பி.டி.ஆர். மனசு வைத்தால் ஸ்டாலின் குடும்பமே ஜெயிலுக்கு போவது உறுதி.

அமைச்சர் தங்கம் தென்னரசு காலத்திலாவது மின் கணக்கு மாதம் தோறும் எடுக்கப்படுமா என்றால், அதுவும் நடக்காது என்று அவரே தெரிவித்து விட்டார். இந்த ஆட்சியில் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது, இந்த ஆட்சியில் கலெக்டருக்கு கூட பாதுகாப்பு இல்லை. அரசு அதிகாரிகள்  தள்ளிவிடப்படுகிறார்கள். இவர்களது ஆட்சியில் எந்த துறையும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை, மாவட்ட ஆட்சியரை தள்ளி விடப்பட்டதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எப்படி பேணி காக்கப்படுகிறது என தெரிந்து கொள்ளலாம்.  அதிமுக ஆட்சி காலத்தில் மக்கள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும், ஆகஸ்ட் 20 ல் மதுரையில் நடைபெறும் மாநாடு அதிமுகவிற்கு புகழை சேர்க்கும் என்றார் செல்லூர் ராஜு.

Similar News