மதுரையில் மாபெரும் தமிழ்க்கனவு -தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை
இன்றைய இளைஞர்களுக்கு தமிழ் மொழியின் மரபு, தொன்மை ஆகியவை குறித்து விழிப்புணர்பு பெற வேண்டுமென்பதே நோக்கம்;
மதுரையில் நடைபெற்ற தமிழ் பண்பாடு பரப்புரை நிகழ்வில் பேசிய எழுத்தாளர் பவா செல்லத்துரை
மதுரை மாவட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு , தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை, திருப்பாலை இ.எம்.ஜி யாதவா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ”மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ் , எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ.நர்த்தகி நடராஜ் பேசியதாவது: இன்றைய இளைஞர்களுக்கு தமிழ் மொழியின் மரபு, தொன்மை ஆகியவை குறித்து விழிப்புணர்பு ஏற்படுத்திடும் நோக்கில், மாபெரும் தமிழ்க் கனவு” என்ற இந்த மகத்தான முன்னெடுப்பை நமது தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மதுரை மாநகர் சங்ககாலம் தொட்டு வாழ்வியல் நெறிகளை உலகிற்கு கற்றுக் கொடுத்த கற்றறிந்த சமூகமாகவே வாழ்ந்து வந்துள்ளோம். கீழடி அருங்காட்சியகம் அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.
தமிழ்ச்சங்க இலக்கியங்களில் வாழ்வியல் நெறிமுறை குறித்த ஏராளமான நூல்கள் உள்ளன. இன்றைய தலைமுறையினர் அவற்றை ஆர்வமுடன் படித்திட வேண்டும். நாம் அனைவரின் மனதிலும் எதிர்காலம் குறித்த கனவு ஒன்று இருக்கும். அதனை அடைவதற்கு பாலின பேதம் பாராமல், நம்மை ஏளனம் செய்யும் நபர்களின் குரல்களுக்கு செவிகொடுக்காமல் இலக்கு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைத்திட வேண்டும். அதற்கு நம்மை நாமே நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ் பேசினார்.
தொடர்ந்து, எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசியதாவது:தமிழ் சமூகத்தில் இன்றைய சூழலில் பெண்கள் பல்வேறு துறைகளில் தங்களது திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில், நாம் சென்றடைய வேண்டிய தூரம் அதிகம் இருந்தாலும், இது வரவேற்கத்தக்க முன்னேற்றம் தான். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகளவில் வாகனம் ஓட்டத் தெரிந்தவர்களாக உள்ளனர்.
வாகனம் ஓட்டுவதென்பது அப்படி ஒன்றும் பெரிய காரியமா என்ற கேள்வி இங்கே பலருக்கும் எழலாம். அதிகபட்சமாக கூட வேண்டாம், 20-30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெண்களுக்கு கூட இத்தகைய சுதந்திரம் நம் சமூகத்தில் வழங்கப்படவில்லை. வாகனம் ஓட்டுவதென்பது ஒரு பெண்ணின் சுயத்தை, சுதந்திரத்தை அடையாளப்படுத்துகிறது. அவர்களது சிந்தனையை விரிவுப்படுத்துகிறது. அனைவருக்கும் அனைத்திலும் சம வாய்ப்பு என்பதே சமூக நீதி. இதனை அடைவதற்கு இந்த ”மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி ஒரு சுடராக அமையும் என எழுத்தாளர் பவா செல்லத்துரைபேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் , மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) .ராஜ்குமார் , உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) .அரவிந்த், யாதவா மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் புஷ்பலதா உட்பட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.