செய்திகளை நடுநிலைமையோடு மக்களிடம் கொண்டு செல்வதும் முக்கியம்: ஊடகப்பயிலரங்கில் கலெக்டர் அனீஷ்சேகர்
சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை போக்கிட ஊடகவியலாளர்களின் பங்களிப்பு முக்கியம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்
மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் மதுரையில் இன்று நடைபெற்ற ஊரக ஊடகவியலாளர் பயிலரங்கை குத்து விளக்கேற்றி அவர் தொடங்கி வைத்தார். புத்தாக்க பயிலரங்கு கையேட்டினையும் அவர் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நல திட்டங்கள் குறித்து கடைக்கோடி கிராம மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்துறையினரின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்றார். செய்திகளைக் கூடுதல் பொறுப்புடன், நடுநிலைமையோடு மக்களிடம் கொண்டு செல்வதும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புதுதில்லி பத்திரிகை தகவல் அலுவலகத் தலைமை இயக்குனர் டாக்டர் வசுதா குப்தா, பத்திரிகை தகவல் அலுவலக தென் மண்டலத் தலைமை இயக்குனர் எஸ்.வெங்கடேஷ்வர், ஆகியோர் பயிலரங்கின் நோக்கம் குறித்தும், மக்களுக்கு அரசின் திட்டங்களை எடுத்துச் செல்வதில் ஊடகத்துறையினருக்கு உள்ள பொறுப்புகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
முன்னதாக சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் எம் அண்ணாதுரை வரவேற்று பேசுகையில், பெருகியுள்ள சமூக ஊடகங்களில் வரும் செய்திகளில் உண்மைத்தன்மையை அறிந்து பரிமாறும் பொறுப்பு நம் அனைவருக்கும் வேண்டும் என்று கூறினார். இந்தப் பயிலரங்கில் பொதுச் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி, மாவட்ட வனத்துறை அதிகாரி குருசாமி தப்பாலா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நடராஜ குமார், ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் சேவியர் ஆகியோர் பங்கேற்று மதுரை மாவட்டத்தில் தங்கள் துறையின் பணிகள் பற்றியும் கொரோனா காலங்களில் ஊடகத்துறையின் பங்களிப்பு குறித்தும் எடுத்துரைத்தனர்.