21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கப்படுவதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?.. நீதிபதிகள் கேள்வி.

தமிழகத்தில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Update: 2022-11-28 16:37 GMT

உயர் நீதிமன்ற மதுரை கிளை. (கோப்பு படம்).

தமிழகத்தில் டாஸ்மாக் என அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 5400 கடைகள் உள்ளன. 43 கிடங்குகள் உள்ளன. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் போதைப் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மதுபான விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும், கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு மதுபான விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களில், "தமிழகத்தில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும் என்றும் மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், தமிழகத்தில் தான் குறைவான நேரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், விற்பனையில் தமிழகமே பிற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுவின் அளவு குறைவாகவும், விலை அதிகமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என பதில் அளித்தார்.

உடனே நீதிபதிகள், மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என்று மாற்ற ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பினர். அப்போது, அரசுத்தரப்பில், கொரோனா கால கட்டத்தில் மற்ற மாநிலங்களில் இருந்து மது வாங்கி வந்ததாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகி உள்ளன. மதுப்பிரியர்கள் மாற்றுவழியையே யோசிக்கின்றனர். 21 வயதிற்கு கீழானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், மாணவர்களுக்கு மது விற்பனை 100 சதவீதம் செய்யப்படுவது இல்லையா? என கேள்வி எழுப்பினர். இந்த விசயத்தை அரசு தீவிரமாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையெடுத்து, நீதிபதிகள், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பதை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? மற்றும் இதுதொடர்பாக அரசுக்கு வந்த பரிந்துரைகள் என்ன? என்பவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

Similar News