மறைந்த நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
மறைந்த நடிகர் தீப்பெட்டி கணேசன் வீட்டிற்கு சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.;
தமிழ் திரையுலகில் ரேணிகுண்டா கண்ணே கலைமானே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த மதுரையைச் சேர்ந்த தீப்பெட்டி கணேசன் இன்று காலை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதனைதொடர்ந்து அவரது உடல் மதுரை ராமையா தெரு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மதுரையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தீப்பெட்டி கணேசன் இறந்த செய்தி தெரிய வந்தது.
உதயநிதியுடன் கண்ணே கலைமானே படத்தில் நடித்தவர் ஆகையால் செய்தி கேட்டு அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவருடன் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சின்னம்மாள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்