அனுமதியின்றி மின்வேலி அமைத்தால் கடுமையான நடவடிக்கை: மதுரை எஸ்பி எச்சரிக்கை
விவசாயங்கள் நிலங்களில் அனுமதியின்றி மின்வேலி அமைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மதுரை எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்
மதுரை மாவட்டத்தில் சமீப காலங்களில் காட்டு விலங்குகள், பன்றிகள் போன்றவற்றை விவசாய நிலங்களில் தடுப்பதற்காக சிலர் எவ்வித அரசு அனுமதி இன்றியும் உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக மின்சார வேலிகளை தங்கள் வயல்வெளிகளில் அமைத்து வருகின்றனர்.
அவ்வாறு உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் அமைத்து வரும் மின்சார வேலிகள் மீது அந்த பகுதியில் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் தவறுதலாக மிதித்து விடுவதாலும் அல்லது தொட்டு விடுவதாலும் உயிருக்கு ஊறு விளைவிக்கும் விபத்துகள் நேர்கின்றது.
சமீபத்தில் சிந்துபட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தங்குடி கிராமத்தில் புல் அறுக்க சென்ற கருப்பசாமி என்பவர் அங்கு போடப்பட்ட மின்சார வேலியின் மீது மிதித்ததில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அதேபோல் இன்று 15.12.21 ம் தேதி கள்ளிக்குடி காவல் நிலைய சரகம் வலையங்குளம் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவரும் அவருடைய மனைவி அக்கம்மாள் என்பவரும் தங்களுடைய வயலில் பருத்தி எடுக்க சென்றபோது, பக்கத்து வயலில் போடப்பட்ட மின்சார வேலியை மிதித்ததால், கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி அக்கம்மாள் படுகாயமடைந்துள்ளார்.
இதுபோன்று அரசு அனுமதி பெறாமலும் உரிய விதிமுறைகளை பின்பற்றவும் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் பாதுகாப்பின்றி மனித உயிருக்கும் விலங்குகளுக்கும் தீங்கிழைக்கும் வகையில் மின்சார வேலிகளை வயல்வெளிகளில் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.