மயானத்தை அகற்ற கிராம் மக்கள் போராட்டம்: போலீஸார் குவிப்பு
சுடுகாட்டை இடிக்க வில்லை என்றும், அதற்கு முன்னால் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்போவதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்;
ரங்கராஜபுரம் கிராமத்தில் சுடுகாட்டை அப்புறப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, மதுரை ரோட்டில் அமைந்துள்ளது ரங்கராஜபுரம் கிராமம். இங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், ரங்கராஜபுரம் விலக்கில் தங்களது இறுதி சடங்கு செலுத்த சுடுகாடு மற்றும் இடுகாட்டை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி அப்பகுதி அருகே வந்து சுத்தம் செய்தனர். இதனால், தங்களது சுடுகாடு இடிபடும் என நினைத்து அங்கு பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அங்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் பெண்கள் என சுமார் 70 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் கூறும்போது: சுடுகாட்டை இடிக்க வில்லை என்றும், அதற்கு முன்னால் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு அகற்றப்படும் என்று கூறினர். பொதுமக்கள் கூறும்போது: தனியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார் கூறுகின்றனர்.