அலங்காநல்லூர் அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
முகாமில், கால்நடைகளை பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டன. சிறந்த பசுவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.;
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், முடுவார்பட்டி ஊராட்சியில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைந்து சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
திமுக அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றியச்செயலாளர் தன்ராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமணி, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆவின் பொது மேலாளர் சாந்தி வரவேற்றார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நடராஜகுமார், துணைப் பதிவாளர் (பால்வளம்) செல்வம், உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில், கால்நடைகளை பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டன. சிறந்த பசுவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கால்நடை வளர்ப்போர் அனைவரும் தங்களது கால்நடைக ளுக்கு வழங்க வேண்டிய சத்தான உணவு வகைகள், தாது உப்பு கலவை உள்ளிட்டவைகளை இம்முகாமில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உணவு வகைகளை அறிந்து கொண்டு தங்களது கால்நடைகளுக்கு வழங்க வேண்டும். இந்த முகாமில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற் புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, கோழி தடுப்பூசிகள், வெறிநோய் தடுப்பூசிகள் தீவன வளர்ப்பு, சிறு அறுவை சிகிச்சை கள், வகைப்படுத்தப்பட்ட பெண் கன்று உற்பத்திக் கான விந்தணு பிரித்தறிதல், புல்வளர்ப்பு, தாது உப்பு கலவை மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.