திமுக அரசு இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை; முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

திமுக அரசு இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.;

Update: 2024-01-15 05:03 GMT

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு முன்னாள் அமைச்சர் அன்னதான திட்டத்தை துவங்கி வைத்தார்.

தைத்திருநாளில் பொங்கலோ பொங்கல் என்று சொல்வதை மாற்றி பிஜேபிக்கு திமுக அடிமையோ அடிமை என்று சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆவேசமாக தெரிவித்தார்.

மதுரை, வாடிப்பட்டி அருகே பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஐந்து நாட்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை, தொடங்கி வைத்து முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் செய்தியாளரிடம் பேசியதாவது:

பாதயாத்திரை பக்தர்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் . தற்போதைய திமுக ஆட்சியானது, மன்னராட்சி நடத்தி வருகிறது. அது ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர வேண்டும் ஒளிர செய்ய வேண்டும் என்று, தமிழக மக்கள் வேண்டிக் கொண் டிருக்கிறார்கள். மீண்டும், ஜனநாயகம் தலைத்திட ஒவ்வொரு இளைஞரும் உறுதி ஏற்க வேண்டும் இல்லையென்றால், தமிழகம் பேராபத்தை சந்திக்க வேண்டியது இருக்கும் .

திமுக 520 தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். அதில், குறிப்பாக இளைஞர்களுக்கு கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று சொன்னார்கள். அப்படி பார்த்தால் மூன்று ஆண்டுகளில் 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், பன்னாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 லட்சம் பேருக்கு வேலை வழங்கியதாக சொல்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் என்னவென்று தெரியவில்லை .

அதேபோல், அரசு வேலைவாய்ப்பில் 50 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம் என்று சொன்னார்கள். ஆனால், அரசு பணியாளர்கள் தங்கள் வேலைகளை காப்பாற்றிக் கொள்ளவே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.


                                 செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். 

சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாடு கூட்டாட்சி தத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். முதலில் ஜனநாயகத்தை காப்பதற்கு முன் வருவீர்களா என்று இளைஞர்கள் கேட்கிறார்கள்.

இளைஞரணி மாநாட்டிலாவது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அறிவிக்க முன் வருவாரா ஸ்டாலின் என்று இளைஞர்கள் ஏங்கி கிடக்கிறார்கள். 10 ஆண்டுகளில் அதிமுக அரசு 3 லட்சம் கோடி மட்டுமே கடனாக விட்டுச் சென்றது.

அதுவும் முந்தைய கருணாநிதி ஆட்சியில் ஒன்றரை லட்சம் கோடி கடன் விட்டு சென்றார்கள். பாக்கி தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காக வாங்கிய கடனே அதுவும் திட்டங்களாக அறிவிக்கப்பட்டு அதைத்தான் தற்போதைய திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இவர்கள் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் தொடங்கவும் இல்லை செயல்படுத்தவும் இல்லை .

முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலீட்டாளர்கள் மாநாட்டு பற்றி பேசும்போது, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவது சாதனை அல்ல அதை செயல்படுத்தி வெற்றிகண்டால் தான் சாதனை என்று சொல்லி இருந்தார். அதை ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும் .

மேலும், டி ஆர் பாலு பாஜக மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று ஸ்டாலின் கூறியதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ,

தற்போதைய திமுக அரசு தை திருநாளில் பொங்கலோ பொங்கல் என்று கூறுவதை விட பிஜேபிக்கு திமுக அடிமையோ அடிமை என்று சொல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது இதுவே இன்றைய திமுகவின் நிலை. வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும், அடுத்து நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலிலும் புரட்சித் தமிழர் எடப்பாடிக்கு ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் அதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கூறினார்.

இதில், முன்னாள் சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், மதுரை தெற்கு சரவணன், மதுரை கிழக்கு தமிழரசன், அம்மா பேரவை நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன், அலங்காநல்லூர் ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றிய பேரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News