கோயிலில் சிலைகள் திருடிய 6 பேர் கைது

வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில், சிலைகளை திருடிய 6பேரை போலீசார் கைது செய்து அவகளிடமிருந்து 4சிலைகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-07-22 12:21 GMT

சிலைகளை திருடி கைதான 6 பேர்.

மதுரை மாவட்டம் ,வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய்கரையில் ,36அடிஉயர லிங்கவடிவிலான அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில், நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் ஆகிய ஐம்பொன்னால் செய்யப்பட்ட பித்தளை சிலைகள் உற்சவராக வைக்கப்பட்டிந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன்  8ந்தேதி இரவு 8மணிக்கு கோவில் நிர்வாகி கோபிநாத் பூஜைகளை முடித்து கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இதனைத்தொடர்ந்து, இரவு நேர காவலாளி திருவேங்கடம் வந்து பார்த்தபோது, பூட்டை உடைத்து கோவில் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அப்போது , கோயில் உள்ளே இருந்த 3அடி நடராஜர் சிலை, 1அடி உயர நடராஜர் சிலை, 2 அடி உயரமுள்ள சிவகாமி சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள மாணிக்கவாசகர் சிலை ஆகிய 4 சிலைகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து, வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமிராவை பார்த்தபோது நள்ளிரவு 11மணிக்கு முககவசம் அணிந்த 30வயது மதிக்கத்தக்க 7 மர்ம மனிதர்கள் கோவிலின் காம்பவுண்டு சுவரில் இருந்து ஏறி உள்ளே குதித்துள்ளனர். பின்னர், பூட்டை உடைத்து சிலைகளை திருடி சாக்கு மூட்டையில் கட்டிக்கொண்டு தப்பிசென்றது பதிவாகியிருந்தது.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் ,சமயநல்லூர் போலீஸ்துணைசூப்பிரண்டு ஆலோசனையின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இந்நிலையில், வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ், சப்இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் தனிச்சியம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கண்மாய் கரையில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்து 6பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது முன்னுக்குபின் முரனாக பதில் கூறியவர்கள் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் சிலைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும், கண்மாய் பகுதியில் புதைத்துவைத்திருந்த சிலைகளையும் எடுத்துகொடுத்தனர்.

விசாரணையில்,திருச்செந்தூர் வடக்கு ஆத்தூரை சேர்ந்த சையதுபுகாரி மகன் முகமது மைதீன்(42), தொம்மை மகன் ஏசுஅகிலன்(29), ஸ்ரீவைகுண்டம் பழையகாயலை சேர்ந்த மூக்காண்டி மகன் ஐக்கோர்ட்டுதுரை(29), இசக்கிமுத்து மகன் அபிலேஸ்குமார்(20), ரவீந்திரன் மகன் கேசவன்(19), உசிலம்பட்டி கள்ளம்பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன் சின்னன்(20) என்று தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த  ஒப்புதல் வாக்குமூலத்தில், ஐம்பொன் சிலை ரூ. 1 கோடி கிடைக்கும் என்று யாரோ கூறியதால்,  சிலைகளை திருடியதாக தெரிவித்தனர்.

மேலும் ,கண்மாயில் புதைத்து வைத்திருந்த சிலையில் ஒருபகுதியை மாதிரிக்கு எடுத்துசென்று சோதனைசெய்தபோது, பித்தளை சிலைகள் என்று தெரியவந்ததாக ஒப்புக்கொண்டனர். பின்னர், சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News