சோழவந்தான் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை
சோழவந்தான் அரசு மருத்துவமனையில ஒரு பெண்ணின் கை எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
சோழவந்தான் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மூன்று மாதமாக அவதிப்பட்டு வந்த இளம் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிந்தனைச் செல்வி (வயது 27 )இவர் கூத்தியார் குண்டில் திருமணமாகி வசித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ள நிலை கதவில் சாவியை வைக்கும் பொழுது தவறி விழுந்து தனது வலது கையை தரையில் ஊன்றி விட்டார். இதில் சிந்தனை செல்விக்கு மணிக்கட்டுக்கு மேலே கை முறிவு ஏற்பட்டு வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார்.
உடனடியாக கருப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து கைக்கு எண்ணெய் கட்டு போட்டு வைத்தியம் பார்த்து வந்தார். மூன்று மாதங்களாகியும் கை குணமடையவில்லை, எலும்பு முறிவும் சரியாகவில்லை.
அப்போது சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடப்பதாக கிராம மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து சிந்தனைச் செல்வி இரண்டு நாட்களுக்கு முன்பாக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு வந்து தனக்கு ஏற்பட்ட கை எலும்பு முறிவு பற்றிய விவரங்களை டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சிந்தனைச் செல்வியின் கை மணிக்கட்டு பகுதியை பரிசோதித்த டாக்டர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் கை மணிக்கட்டு சரியாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில், சிந்தனைச் செல்வி சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்றைய முன்தினம் மருத்துவத்துறை துணை இயக்குனர் செல்வராஜ் உத்தரவின் பேரில் தலைமை மருத்துவர் தீபா ஆலோசனையின் பேரில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் வீரமணி ஆறுமுகம் செவிலியர்கள் ஜெயகௌரி நிஷாந்தினி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் சிந்தனை செல்விக்கு எலும்பு முறிவு ஆபரேஷன் செய்தனர்.
வெற்றிகரமாக வலது கையின் மணிக்கட்டு அருகே ஏற்பட்ட எலும்பு முறிவை பிளேட் வைத்து சரி செய்து ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தனர். மூன்று மாதங்களாக வலியால் அவதிப்பட்டு வந்த சிந்தனை செல்வி உடனடியாக வலி குறைந்ததையடுத்து நிம்மதி அடைந்தார். இந்த ஆபரேஷனை செய்த மருத்துவ குழுவினரை கிராம மக்கள் பாராட்டினார்கள்.
இது குறித்து டாக்டர் வீரமணி ஆறுமுகம் கூறியதாவது:
சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில், பல்வேறு ஆபரேஷன்கள் சிறந்த முறையில் மதுரை ராசாஜி மருத்துவமனையில் உள்ள சிகிச்சை போல் ஆப்ரேஷன் செய்து நோயாளிகளை குணப்படுத்தி வருகிறோம். இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கை முறிவு ஏற்பட்டு ஆபரேஷன் செய்து கொண்ட சிந்தனை செல்வி கூறியதாவது:-
கூத்தியார் குண்டில் உள்ள எங்கள் வீட்டில் வீட்டுக் கதவை பூட்டிவிட்டு சாவியை நிலைக்கு மேல் வைத்த பொழுது தவறி கீழே விழுந்து கையை தரையில் ஊன்றி விட்டேன். அப்பொழுது கை மணிக்கட்டு அருகே சத்தம் கேட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு வேதனையால் துடித்து வந்தேன். அப்பகுதியில் இதற்கான சிகிச்சை பெறுவதற்கு இடம் இல்லாததால் கருப்பட்டியில் உள்ள எனது தாய் வீட்டுக்கு வந்து மூன்று மாத காலமாக எண்ணெய் கட்டு போட்டு வந்தேன். எனது கை சரியாகாமல் வலது கை வளைந்த நிலையில் இருந்து அவதிப்பட்டு வந்தேன்.
அப்பொழுது சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் இதற்கான ஆபரேஷன் நடப்பதாக இங்குள்ள உறவினர்கள் தெரிவித்தனர். இதன் பேரில் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக வந்தோம். இங்குள்ள டாக்டர்கள் செவிலியர்கள் எனக்கு ஆபரேஷன் செய்து எனது வலது கையை சரி செய்து கொடுத்துள்ளனர். உண்மையிலேயே சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் இந்த அளவுக்கு ஆபரேஷன் நடக்கும் என்று எனக்கு தற்போது தான் தெரிந்தது. என் போன்ற ஏழை மக்கள் கிராமப்புறங்களில் உள்ள இது போன்ற அரசு மருத்துவமனைகளை பயன்படுத்தி தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களை குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.