மதுரை மாவட்டம் மண்ணுயிர் காக்கும் திட்டங்கள்: வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை துறை இணை இயக்குநர் சுப்புராஜா, செய்தியாளர்களுடன்சுற்றுப் பயணம் மேற்கொண்டுஆய்வு செய்தார்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சின்ன இலந்தை குளம், தண்டலை, அழகாபுரி, தேவசேரி, அகோவில்பட்டி கிராமப்பகுதிகளில் ”முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்” திட்டப்பணிகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் சுப்புராஜா செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் சுப்புராஜா தெரிவித்துள்ளதாவது: மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் பயிர்களைச் செய்வதாலும், மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. இதுதவிர, உற்பத்தி அதிகரிப்பதற்கு அதிக அளவில் இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால், மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும், நலமும் குன்றியுள்ளன. எனவே, மண்வளத்தைப் பேணிக்காக்கவும்,மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்தவும் 2024-2025-ஆம் ஆண்டில் 206 கோடி ரூபாய், 22 இனங்களுடன் “முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது
இத்திட்டத்தின் கீழ், முதல் இனமாக பசுந்தாள் உரவிதை விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது. பசுந்தாள் உரப் பயிர்கள் மூலம் மண்வளம் பேணிக்காக்கப்பட்டு, மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்பட்டு, உயிர்ம முறையில் மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கப்படும். இதனால், வேளாண் விளைபொருட்களின் தரம் மேம்பட்டது, மக்களின் நலம் பேணிக்காக்கப்படும்.
மண்ணில் வளர்ந்து, மண்ணிலே மக்கி, மண்ணின் வளம் பெருக்குவது “பசுந்தாளுரப் பயிர்கள்”. இதன் மூலம் விவசாயிகளிடம் ஊக்குவித்த ஆயக்கட்டு மற்றும் இறவைப் பாசனப் பகுதிகளில் முதற்கட்டமாக 2024-2025-ஆம் ஆண்டு 2 இலட்சம் ஏக்கரில் 20 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் 5,000 ஏக்கர் நிலப்பரப்பிற்கு 100 மெட்ரிக் டன் அளவில் 50 சதவீதம் அரசு மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம் 50% மானியம், ரூ.25/-கிலோ என்ற வகையில் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ வரை வழங்கப்படுகிறது. மேலும், மானாவாரியில் சாகுபடி 50% மானியம், அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.1, 200/- வீதம் வழங்கப்படுகிறது. மரபுசார் நெல் இரகமான சீவன் சம்பாவின் சாகுபடி செய்தல். சிறுதானியங்கள், பயறு வகைகளின் பாரம்பரிய இரகங்களை பாதுகாத்தல். இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் மையம் அமைப்பதற்கு ரூ,100000/- மானியம் வழங்கப்படுகிறது.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணைத்திடல் உருவாக்குதல், மாதிரி உயிர்ம வேளாண் பண்ணை அமைத்திட ரூ.10,000 முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், நிதியுதவி வழங்கப்படுகிறது.
மேலும், மண்புழு உரம் தயாரித்தல் மையம் அமைப்பதற்கு 50% மானியம், அதிகபட்சமாக ரூ.3,000 வரை வழங்கப்படுகிறது. (ஒரு விவசாயிக்கு 2 மண்புழு உரப்படுக்கைகள் ரூ.6000 வரை மானியம் வழங்கப்படுகிறது). வேளாண் காடுகள் திட்டத்தின் வாயிலாக வேப்பமரக்கன்றுகள் நடப்பு ஊக்குவிப்பு.முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பசுந்தாள் உர விதைகள் விநியோகம் (50% மானியம், அதிகபட்சமாக ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உர விதைகளுக்கு ரூ.1000 வரை வழங்கப்படுகிறது.
மேலும், ஆடாதொடா, நொச்சி நடவு பொருட்கள் விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 நடவுக் கன்றுகள் வழங்கப்படுகின்றன. மேலும், உயிர்ம வேளாண்மையை ஊக்குவித்தல் (பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம்), ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம், வேளாண் காடுகள் திட்டம் (வேளாண் காடுகள்), மண்வள அட்டை வழங்குதல் திட்டம், களர் நிலங்களை சீர்படுத்தி பயிர்களின் உற்பத்தியைப் பெருக்குதல் திட்டம், வேளாண் பயிர்களுக்கு திரவ உயிர் உரம்வழங்குதல் திட்டம், வயல் சூழல் ஆய்வு மூலம் நன்மை தரும் பூச்சிகளைக் கண்டறிந்து நெற் பயிரில் இரசாயன மருந்துகளின் பயன்பாட்டினைக் குறைத்தல் திட்டம், ஒருங்கிணைந்த உர மேலாண்மை வழியாக இராசயன உரங்கள் பயன்பாட்டினை குறைத்தல், விழிப்புணர்வு முகாம் நடத்துதல், வேளாண் கிராமங்களை உருவாக்குதல் திட்டம், மண்மற்றும் பயிர்க்கான ஆரோக்கிய நுண்ணுயிரிகளின் ஒருங்கிணைப்பு தொழில்நுட்ப திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் சுப்புராஜா செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது தெரிவித்தார்.