விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு எஸ்.பி.ஐ சார்பில் 20 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது
சோழவந்தான் அருகே விபத்தில் சிக்கிய அரசு ஊழியரின் குடும்பத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் விபத்து காப்பீட்டுத் தொகையை வழங்கினார்.;
சோழவந்தான் அருகே திருமால் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த ரட்சகன். வனத்துறையில் பணியாற்றிய இவர், சோழவந்தான் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்ததுடன், வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் செலுத்தி விபத்து காப்பீடு செய்திருந்தார்.
இந்நிலையில் , சில மாதங்களுக்கு முன் வாடிப்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் ஆனந்த ரட்சகன் உயிரிழந்தார். இதையடுத்து , நேற்று அவரின் மனைவி பாலாமணியிடம்,வங்கி மேலாளர் ஸ்ரீவள்ளி, ரூ.20 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். காப்பீட்டு அலுவலர் சீனிவாசன் மற்றும் வங்கிப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இது குறித்து , வங்கி மேலாளர் ஸ்ரீ வள்ளி கூறுகையில்" எஸ்.பி.ஐ வங்கியின் இந்த விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் வருடம் ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தினால், எதிர்பாராத விபத்து ஏற்படின், ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகை கிடைக்கும். எனவே, மிக எளிதான, பெரிதும் பலன் தரக்கூடிய இந்த விபத்து காப்பீடு திட்டத்தில்,வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இணைந்து பயன்பெற வேண்டுகிறோம்" என்றார்.
காப்பீட்டு தொகை பெற்றுக் கொண்ட ஆனந்த இரட்சகன் மனைவி பாலாமணி வங்கி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்..