அலங்காநல்லூர் அருகேயுள்ள நடுநிலைப் பள்ளியாக சிறந்த பள்ளியாக தேர்வு
தமிழ்நாட்டில் சிறந்த அரசு பள்ளியாக சரந்தாங்கி நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் சிறந்த அரசு பள்ளியாக சரந்தாங்கி நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டதற்கு எம்.எல்.ஏ வெங்கடேசன் பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. முன்னதாகவே தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்கிற 5 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு,.க.ஸ்டாலின், அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியர், மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதாக தெரிவித்திருந்தார். மேலும் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறியிருந்தார். இதனையொட்டி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும், மராமத்துப் பணிகளுக்கும் கூடுதலாக சுமார் 1400 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இத்துடன், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டிபிஐ (D.P.I.) வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவச் சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்றும் அழைக்கப்படும் என்றும் என்று அறித்திருந்தார். மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
2020 -21ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியானது. 38 மாவட்டங்களில் இருந்து தலா 3பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
அதில் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அப்பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறந்த பள்ளியாக தேர்வு பெற்றதற்கு பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட அவை தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி, ஒன்றிய துணை சேர்மன் சங்கீதா மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாய அணி நடராஜன், பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், நகர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி துணை சேர்மன் சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துராமன், செந்தில் குமார், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், இளைஞரணி சந்தன கருப்பு, மருது, மாணவரணி பிரதாப், தகவல் தொழில்நுட்ப அணி சதிஷ், பொறியாளர் அணி ராகுல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.