மதுரை அருகே பேரூராட்சியில் தூய்மைப் பணி முகாம்
சோழவந்தான் பேரூராட்சியில் பொது இடங்கள் கோவில்கள் பூங்காக்கள் போன்ற இடங்களில் தீவிர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது;
மதுரை சோழவந்தான் பேரூராட்சி சார்பில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் தூய்மைப் பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பேரூராட்சியின் பொது இடங்கள் கோவில்கள் பூங்காக்கள் போன்ற இடங்களில் தீவிர தூய்மை பணி செய்தல் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளில் கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் படி மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் தலைமையில் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன் முன்னிலையில், சோழவந்தான் பேரூராட்சியின் பேருந்து நிலையம், இரயில்வே பீடர் ரோடு ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பேரூராட்சி பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டு கழிவுகளை தரம் பிரித்து வழங்கிய நபர்களுக்கு பரிசுகள் வழங்கியும் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், சோழவந்தான் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்.முருகானந்தம் பேரூராட்சி துணைத் தலைவர் லதாகண்ணன், வார்டு உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்...2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச் சூழலை உறுதி செய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமை களில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் (Cleanliness drive) நடத்த நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் (People's Movement for Clean Cities)" தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப் பணி மற்றும் தேசிய பசுமை படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் இரண்டாவது சனிக்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரபலங்களைக் கொண்டு, மக்களுக்கு தூய்மையின் அவசியத்தை பற்றி வலியுறுத்தும் விதமாக பூங்காங்களில் கூட்டங்கள் நடத்திடவும், அவர்களை கொண்டு தூய்மை மற்றும் சுத்தம் தொடர்பான துண்டு பிரசாரங்கள் விநியோகிக்கவும், மஞ்சப்பையின் அவசியத்தை உணர்த்த மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.