சோழவந்தான் அருகே ரவுடி வெட்டி கொலை
Rowdy hacked to death near Cholavanthan;
மதுரை சோழவந்தான் அருகே பிரபல ரவுடியான குண்டார் சக்திவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தப்பியோடிய கொலையாளிகளை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் குண்டார் என்ற சக்திவேல் (37). பிரபல ரவுடியான இவர் மீது மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சில தினங்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் இன்று மாலை திண்டுக்கல்லில் இருந்து சோழவந்தான் வழியாக தனது சொந்த ஊரான திருமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மேலக்கால் அரசு பள்ளி அருகே வந்தபோது இவரை வழிமறித்த மர்ம நபர்கள், பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிகொலை செய்தனர். இதில் ரவுடி சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடயங்களை சேகரித்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த காடுபட்டி போலீசார் தனிப்படை அமைத்து தப்பியோடிய கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பிரபல ரவுடி கொலை செய்யபட்டதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். இதனால் இப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.