வாடிப்பட்டி, சோழவந்தான் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரிக்கை
வாடிப்பட்டி, சோழவந்தான் பேரூராட்சிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
மேட்டு நீரேத்தான் கிராமத்தில், ஆக்கிரமிப்பை அகற்றி, கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும் விட கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாடிப்பட்டி பேரூராட்சி மேட்டுநீரேத்தான் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் கட்டும் பணியை புதிதாக தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி,18வது வார்டு மேட்டு நீரேத்தான் தனி கிராமமாகும். இங்கு, தற்போது பேரூராட்சி சார்பாக புதிதாக வடிகால் மற்றும் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
தற்போது, அனைத்து வடிகால்களும் தாழ்வாகவும் தூர்ந்தும், தெருவில் சேப்டிக் டேங்க் கட்டியும் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், பல இடங்களில் நடைபாதைகள் குறுகிபோய் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. மழைக்காலங்களில் வடிகால் வழியாக மழைநீர் செல்லாமல் தெருக்களிலும், வீடுகளிலும் புகுந்துவிடுகிறது. மேலும், சாவடிக்கு பின்புறம் சுமார் 50அடிவரை இருந்த பாதை ஆக்கிரமிப்பு செய்ததால் மிகவும் சுருங்கிவிட்டது.
இந்த பாதையில் தான் துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவின்போது அம்மன் வீதி உலா செல்லும். ஆனால், அந்த பாதை தற்போது முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்றிவிட்டு புதியதாக வடிகால் கட்டும்பணியை தொடங்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதே போல மதுரை அருகே உள்ள சோழவந்தான் நகரில் கடைவீதியில் ஆக்கிரமிப்பு பெருகி வருகிறது. இதனால், சாலைகளில் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது.
சோழவந்தானில், மார்க்கெட் ரோடு, பெரிய கடைவீதி, ரயில்வே பீடர் ரோடு, தெற்குத் தெரு, மேல், வடக்கு ரத வீதி, அய்யனார் பொட்டல் ஆகிய பகுதிகளிலும், மாரியம்மன் கோயில் அருகிலும் சாலையோர ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து பெருகி வருகிறது.
மேலும், அய்யனார் பொட்டல், மாரியம்மன் கோயில் அருகே சாலையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஆகவே, வருவாய்த் துறை, சோழவந்தான் பேரூராட்சித் நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, போலீஸார் இணைந்து, நகரில் நிலவும் ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது டன், போக்குவரத்து நெரிசலை போக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.