அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயக்க அனுமதியளிக்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை அரவை துவங்க அனுமதியும் , ஆலை பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆர் பி உதயகுமார் கோரிக்கை

Update: 2022-01-04 16:19 GMT

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற ஆர்பி உதயகுமார்

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:மதுரை , திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 18 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது . 2019-2020 மற்றும் 2020 2021 அரவைப்பருவத்தில் போதிய மழையளவு இல்லாமல் கரும்பு பதிவு குறைவாக செய்யப்பட்டதால் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க தற்காலிமாக ஆலையின் அரவை நிறுத்தம் செய்யப்பட்டது .

அதிமுக அரசு விவசாயிகளின் நலன் கருதி அவர்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகை ரூ 22.16 கோடி வழங்கியது. மேலும் ,தொழிலாளர் நலன் கருதி அவர்களுக்கான நிலுவை ஊதியம் மற்றும் ஆலையின் அத்தியாவசிய செலவீனங்களுக்காக இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 2018 முதல் டிசம்பர் 2020 வரை ரூ .17.16 கோடி வழங்கப்பட்டது .

ஆலையின், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி அதிமுக அரசு வழங்கிய ரூ 39.35 கோடியை தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு கிரையத்தொகை நிலுவையின்றியும் மற்றும் ஆலை தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 2018 முதல் டிசம்பர் 2020 வரையான காலங்களுக்கு ஊதியம் நிலுவையின்றி வழங்கப்பட்டுவிட்டது

அரவைப் பருவத்திற்கு சுமார் 50,000 டன்கள் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது . மேலும், சுமார் 16,000 டன்கள் பதிவு செய்யப்படாத கரும்பு உள்ளது . இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் கரும்பு மகசூல் அதிகரித்துள்ளது . கடந்த இரண்டு அரவைப்பருவமாக தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்ட தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை 2021-2022 அரவை துவங்குவதற்கு அனுமதியும் , ஆலை பராமரிப்புக்கு தேவையான நிதி ரூ 10 கோடி ஒதுக்கீடு செய்தும் மற்றும் ஆலை தொழிலாளர்களுக்கு கடந்த ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2021 வரை நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் சட்டரீதியான செலவீனங்களுக்காக ரூ 11.19 கோடி வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் .

இந்த ஆண்டு ஆலையை இயக்குவதன் மூலமாக 10,000 கரும்பு விவசாயிகள் 500 தொழிலாளர்கள் நேரடியாக பயன் பெறுவர் , மேலும் கரும்பு வாகன போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் லாரி , டிராக்டர் , மற்றும் மாட்டுவண்டி , விவசாய கூலித்தொழிலாளர்கள் , வணிகர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் . எனவே 2021-2022 - ம் ஆண்டு அரவைப்பருவத்தை துவக்கிட உடன் நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News