சோழவந்தானில் அடிக்கடி பழுதாகும் ரயில்வே கேட்: தொடர் அவதியில் மக்கள்
சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது;
சோழவந்தானில் அடிக்கடி பழுதாகும் ரயில்வே கேட்டால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி:
மதுரை மாவட்டம், சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது.
மேலும் , மேம்பால பணிகள் முடிவுற்ற நிலையில் பொது போக்குவரத்தை தொடங்காததால் தினசரி 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி பகுதிகளுக்கு செல்வதற்காக ரயில்வே கேட்டை தாண்டி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது இந்த நிலையில் சோழவந்தான் ரயில்வே கேட் போதிய பராமரிப்பு இல்லாததால், அடிக்கடி பழுதடைந்து விடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் .
இதேபோல், நேற்றும் வழக்கம் போல் மதியம் ரயில்வே கேட் பழுதடைந்து விட்டது. இதனால், அந்த நேரத்தில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக, ரயில் வரும் தண்டவாளப் பகுதியில் ஆட்டோ மற்றும் வாகனங்கள் வந்தபோது ரயில்வே கேட்டை திறக்க முடியாததால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் நிலை இருந்தது ஆகையால் ரயில்வே துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு ரயில்வே கேட் பழுதடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றனர். மேலும், ரயில்வே மேம்பாலத்தை விரைவில் திறந்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.