வாடிப்பட்டி அருகே, அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தனியார் நிறுவனம் சார்பில் புதிய கட்டிடம்..!
அலங்காநல்லூர், அய்யங்கோட்டை அரசு பள்ளிகளுக்கு தனியார் நிறுவனம் சார்பில் ரூ.18.15 லட்சம் மதிப்பீட்டில் நவீன வகுப்பறை, சுற்றுச்சுவர், உணவு அறை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன.;
அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டை அரசு பள்ளிக்கு ரூ.18.15 லட்சம் மதிப்பீட்டில் நவீன வகுப்பறை, சுற்றுச்சுவர், உணவுஅறை வசதிகள்:
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, அய்யங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், வைகை அக்ரோ தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் உணவுஅறை, அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நவீன வகுப்பறை வசதி, அங்கன்வாடி பள்ளிக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் போன்றவை கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதனை வைகை அக்ரோ தயாரிப்பு நிறுவன இயக்குனர் குணசேகரன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் நாகலட்சுமி கருப்பணன் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் புஷ்பலதா, காளிஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர்கள், வைகை அக்ரோ நிறுவன பொது மேலாளர் வெங்கடேசன், நடேசமூர்த்தி, மற்றும் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைப்போல பல தனியார் நிறுவனங்கள் கல்வி வளர்ச்சிக்கு அரசு பள்ளிகளுக்கு உதவி செய்யவேண்டும். பல பெரிய பணக்காரர்கள் கோயில்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். செய்யவேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை. ஆனாலும் கல்விக்கு செய்யும் நிதியளிப்பு கடவுளுக்கே செய்யும் தொண்டாகும்.