சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகளிடம் எம்எல்ஏ உறுதி
சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்;
சோழவந்தான் அருகே பொம்மன் பட்டியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை கொள்முதல் நிலையம் அமைக்கநடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உறுதியளித்தார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே பொம்மன்பட்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பொம்மன்பட்டி தேவாலயம் அருகே விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து குவித்து வைத்துள்ளனர். இந்தப் பகுதிகள் நாச்சிகுளம் கருப்பட்டி அம்மசியபுரம் பொம்மன்பட்டி ஆகிய பகுதிகளில் அறுவடை செய்த நெல்அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். எதிர்வரும் தேவாலய திருவிழா மற்றும் கோவில் திருவிழா நடைபெறுவதற்கு முன்பாக விரைந்து கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கூறியதாவது: சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில், உள்ள அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்மூட்டைகள் விரைவில் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொள்முதல் செய்யப்படும் என்றும், அறுவடைக்கு தயாராக உள்ள பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து மாவட்ட நிர்வாகம் நேரடி பார்வையில் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.