இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: இரு கிராமத்தினரிடையே வாக்குவாதம்

இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இரு கிராமத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-13 09:14 GMT

சோழவந்தான் அருகே திருமால் நத்தம் கிராமத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமால் நத்தம் கிராமத்தில் தனியார் சிலர் தங்களது இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்துள்ளனர்.

அந்த இடத்திற்கு அருகேயுள்ள ரிஷபம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சிலர் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த, திருமால் நத்தம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறைக்கு புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், சோழவந்தான் போலீசார் சம்பந்தப்பட்டவர்களிடம், பிரச்சனை கொண்ட இடத்தில் உடலை புதைக்கக்கூடாது என்று உத்தரவிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து, திருமால் நத்தம் கிராம பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் உள்ள தனியார் இடத்திற்கு அருகேயுள்ள ரிஷபம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் சுடுகாடு ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், எங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மூலம் வட்டாட்சியர் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முற்றுகை போராட்டம் செய்வோம் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் ஆறுமுகம் கூறியபோது: காலையில் வந்து கிராம மக்கள் என்னிடம் நம்ம கிராமத்தில் பட்டா இடத்திற்கு அருகிலுள்ள ரிஷபம் ஊராட்சியில் இறந்தவருடைய உடலை எரிப்பதற்கு, குழி தோண்டி உள்ளனர் என்று, கூறியதால் நான் சம்பந்தப்பட்ட இடத்தில் வந்து பார்த்துட்டு முறையா காவல்துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய் துறைக்கு தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்துள்ளேன். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது, சம்பவம் குறித்து வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் காவல் துறை ஆகியோர்களுக்கு தகவல் அளித்தேன். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு இல்லாத இடத்தில், பிணத்தை எரிக்க கூடாது என்று தெரிவித்ததாக கூறினார்.

Tags:    

Similar News