சோழவந்தான் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்..
மதுரை மாவட்டம், சோழவந்தானில் காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.;
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு சிவநாதபுரம் கிராமத்தில், ஆதிதிராவிடர் காலனி வழியாக செல்லும் சாலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிலர் அந்தப் பணிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தள்ளியதாகவும், ஏற்கெனவே போடப்பட்டிருந்த சாலையை, பெயர்த்து எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சோழவந்தான் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையை சேதப்படுத்தினார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் சோழவந்தான் காவல் ஆய்வாளரிடம் முறையிட்டனர் . அதனை கேட்ட ஆய்வாளர் முறையாக புகார் அளிக்காமல், இவ்வாறு கிராமத்தினர் வந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்தார்.
புகார் மனு எழுதி கொடுத்து விட்டு செல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று காவல் ஆய்வாளர் அறிவறுத்தியதன் பேரில், கிராமத்தின் சார்பாக சோழவந்தான் காவல் ஆய்வாளிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக் கொண்ட சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன், புகாரின் பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிதார்.
இதைத்தொடர்ந்து, காவல் நிலையத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சோழவந்தான் காவல் நிலையத்தில் திடீரென ஒரே கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சோழவந்தான் போலீஸார் தெரிவித்தனர்.