அய்யங்கோட்டையில் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டையில் பாசனக் கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை.;
அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டை ஊராட்சியில் பெரியாறு பாசன பள்ளமடை வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டை ஊராட்சியில், பள்ளமடை பாசன வாய்க்காலை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றக்கோரி அப்பகுதி பாசன வசதி பெரும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப் பகுதியில், சுமார் 100 ஏக்கர் பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் உள்ள நிலையில், அய்யங்கோட்டை நான்கு வழிச்சாலை எதிர்ப்புறமாக 2 மடை, பள்ளமடை வாய்க்கால் வழியாக தண்ணீர் வெளியேறி விவசாய நிலங்களுக்கு பாய்கிறது.
இந்நிலையில், பள்ளமடை வாய்க்கால் ஒரு பகுதியை தனிநபர் வேலி அமைத்து தமது சொந்த நிலம் என ஆக்கிரமிப்பு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி விவசாயிகளின் வாழ்வாதாதாரத்தை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.