அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிர்வாகக் குழுக் கூட்டம்
ஜனவரி மாதம் ஆலை இயங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை;
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு கூட்டத்தில் ஜனவரியில் மீண்டும் ஆலை இயங்க வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றபட்டது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு, நிர்வாக குழுத் தலைவர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கதிரேசன், நிர்வாகக் குழு உறுப்பினர் வக்கீல் பழனிச்சாமி, நல்லமணி காந்தி, மைனர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடப்பு வருடம் 2021- 2022 அரவை பருவத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 1800 ஏக்கர் கரும்பு பரப்பளவில், சுமார் 60 ஆயிரம் டன் கரும்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர பதிவு செய்யப்படாத கரும்பு 15 ஆயிரம் டன்களும், இத்துடன் மொத்தம் சேர்த்து 75 ஆயிரம் டன் கரும்புகள் உள்ளது. எனவே ,நமது ஆலையின் அரவை பாதிக்காமல் இருப்பதற்கு தரணி சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட கரும்புகளை, கரும்பு பரிமாற்ற முறையில், தமது ஆலைக்கு அருகாமையில் இருக்கும் கரும்புகளை எடுத்து அரவை செய்வதற்கும், அத்தியாவசிய செலவினங்களுக்கு அரசிடமிருந்து வழிவகை கடனாக ரூ. 10 கோடி பெற்றுத் தர சர்க்கரைத் துறை ஆணையர் சிபாரிசு செய்ய வேண்டும் எனவும், வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வருகிற ஜனவரி மாதம் ஆலை இயங்க சர்க்கரை துறை ஆணையர் மூலம் அரசை அணுகி வேண்டிய தேவைகளை செய்து முடிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.