சோழவந்தானில், சாலை வளைவுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட கோரிக்கை..!

சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் அருகே வளைவுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும் என பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-08-19 09:15 GMT

சோழவந்தானில் சாலை வளைவுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை, ஒட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.படம்  சனீஸ்வரன் கோவில் பகுதி 

சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் அருகே வளைவுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும் என பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சோழவந்தான் :

மதுரை மாவட்டம், சோழவந்தானில் 46 நம்பர்  ரோடு, சனீஸ்வரன் கோவில், மருது மஹால் பகுதியில் உள்ள சாலை வளைவுகளிலும் வேகத்தடைகளிலும்  ஒளிரும் ஸ்டிக்கர்கள்  ஒட்ட வேண்டும் என்று, இந்தப் பகுதி பொதுமக்கள்,  பக்தர்கள்  மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். பொதுவாகவே வேகத்தடை உள்ள இடங்களில் வெள்ளைக்கோடுகள் போட்டால் மட்டுமே வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெளிவாகத் தெரியும். 

வெள்ளைக்கோடுகள் போடாமல் இருந்தால் அருகில் வந்தவுடன்தான் வேகத்தடை இருப்பது தெரியும். இதனால் உடனே பிரேக் போடவேண்டிய நிலை ஏற்படும். சிலவேளைகளில் விபத்து ஏற்படவும் வாய்ப்புகள் ஏற்படலாம். மேலும் வேகத்தடை மீது போடப்படும் வெள்ளைக்கோடுகள் சில நாட்களில் காணாமல் போய்விடுகின்றன. இதனால் வேகத்தடை இருப்பதே தெரியாமல் போய்விடுகிறது. 

உள்ளூர் ஓட்டுனர்களுக்கு எங்கு வேகத்தடை இருக்கும் என்பது தெரியும். அதனால் அவர்கள் வேகத்தடை உள்ள இடங்களில் நிதானமாக வருவார்கள்.ஆனால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை எங்கு இருக்கிறது என்பது தெரியாமல் போகலாம்.

அதனால், வேகத்தடைகள் மீது சுண்ணாம்பினால் வெள்ளைக்கோடுகள் போட்டாலும்கூட ஒளிரும் ஸ்டிக்கர்கள் பயன் தருவதாக அமையும். வேகத்தடை இருக்கும் இடங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டிவிட்டால் வேகத்தடை இருப்பதை அறிந்து ஓட்டுனர்கள் விபத்தில்லாமல் வாகனங்களை இயக்கமுடியும். 

தற்போது வேகத்தடை இருக்கும் இடங்களில் வாகனத்தை இயக்கும் போது வேகத்தடை இருப்பது தெரியாமல் சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்  துறையினர்  வேகத்தடை இருக்கும் இடங்களில்  ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்  கேட்டுக் கொண்டுள்ளனர். 

அதேபோல வளைவுகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டினால் இரவு நேரங்களில் வளைவுகளை பாதுகாப்பாக கடந்து செல்ல உதவியாக இருக்கும். 

Tags:    

Similar News