சோழவந்தானில் சலவைத்தொழிலாளி வீடு தீப்பிடித்து பொருட்கள் சேதம்
சோழவந்தானில் சலவைத்தொழிலாளி வீடு தீப்பிடித்து பொருட்கள் சேதம் அடைந்தது.;
மதுரை அருகே சோழவந்தான் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி எதிரில் உள்ள தெருவைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 40.).சிவராத்திரி விழாவை முன்னிட்டு, இவர் தனது மனைவி தேவியுடன் அழகர்கோவிலில் தீர்த்தம் எடுக்க சென்று விட்டார்.இவரது இரண்டு மகன்களும் வேலைக்குச் சென்றுவிட்டனர்.வீடு பூட்டி இருந்த நிலையில், வீட்டில் உள்ளே இருந்து புகை கிளம்பி வந்தது.இதனால், அருகில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் தெறித்து ஓடின.
இதைக்கண்ட, அக்கம்பக்கத்தினர் சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.இதன் பேரில், நிலைய அலுவலர் பழனிமுத்து மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். சிவராத்திரியையொட்டி இவரது வாடிக்கையாளர்கள் பட்டுச் சேலைகள் மற்ற சேலைகள், வேட்டிகள், பேண்ட், சட்டைகள் ஆகிய துணிகளைத் துவைத்து உலர வைத்து துணிகள் தீயில் கருகி சேதமடைந்து விட்டது.
இதுமட்டுமல்லாது, வீட்டிலுள்ள பிரிட்ஜ், டிவி,மிக்ஸி, அயன்பாக்ஸ், டேபிள்,சேர் மற்றும் துணிகளை தேய்க்கக்கூடிய டேபிள் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்துவிட்டது. சேதத்தின் மொத்த மதிப்பு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.கிராமநிர்வாக அலுவலகர் சிவராமன், சம்பவ இடத்திற்கு வந்து தீயில் கருகி சேதமடைந்த சேதாரங்களை கணக்கு எடுத்தார்.
அழகர்கோவில் சென்று திரும்பிய பாண்டி, தீயில் கருகி பொருட்கள் சேதம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.அவரும் அவரது மனைவியும் கதறிக் கதறி அழுதார்கள்.இதுகுறித்து, பாண்டி கூறும் பொழுது சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, நாங்கள் துவைத்து சலவை செய்து கொடுப்பதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து உயர் ரக பட்டு சேலைகள் மற்றும் துணிகள் எடுத்து வந்து ஆற்றில் துவைத்து உலரவைத்து அயன் செய்வதற்காக வீட்டில் வைத்திருந்தோம். நாங்களும், குலசாமி கும்பிடும் வதற்காக முதலில் அழகர்கோவில் சென்று தீர்த்தமாடி தீர்த்தம் எடுக்கச் சென்று விட்டோம். எதிர்பாராதவிதமாக மின்சார கசிவு ஏற்பட்டு நாங்கள் வைத்திருந்த துணிகள் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்துவிட்டது. மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்துவிட்டது.
துணிகள் வாங்கிய வாடிக்கையாளர்களிடம் என்ன சொல்வது, எப்படி கொடுப்பது என்று நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.அந்த அளவுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது.இதனால் ,குடும்பமே கலங்கிய நிலையில் உள்ளோம்.அரசு எங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்திற்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டுகிறோம் என்று தெரிவித்தார்.