அலங்காநல்லூர் அருகே பட்டப்பகலில் பூட்டிய வீடுகளில் நகைகள் கொள்ளை..!

அலங்காநல்லூர் அருகே பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.;

Update: 2024-06-25 09:40 GMT

வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் அருகே, அடுத்தடுத்து பூட்டிய வீடுகளின் கதவுகளை உடைத்து திருட்டு - 23 பவுன் தங்க நகை கொள்ளை - அடுத்தடுத்த வீடுகளில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் பற்றாக் குலையால், தொடர்  திருட்டு நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, வாகைகுளம், நியூ விகாஷ் நகர், ரங்கராஜ் நகர் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த 23 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலங்காநல்லூர் அருகே, சின்னஊர்சேரி, அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் சுப்புரத்தினம்(54). இவரது கணவர் சக்திவேல் பாண்டியன். இவர்கள் வாகைகுளம் அருகே நியூ விகாஸ் நகர், ரங்கராஜ் நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் நேற்று காலையில் வழக்கம் போல் வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்குச்  சென்று விட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு வீட்டில் வந்து பார்த்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு, இருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதேபோன்று, இவர்களது வீட்டின் அருகே மெடிக்கல் ரெப்ரசென்டேடிவ் வேலை பார்த்து வரும் பாண்டியராஜன் (34)  என்பவரும் தனது மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை 5 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ஒரு பவுன் செயின் திருடு போனது தெரிய வந்தது. இந்த இரு வெவ்வேறு திருட்டு சம்பவங்கள் குறித்து, அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து,தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் காவல் ஆய்வாளரின் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 450 பவுன் நகை காணாமல் போனது. தொடர்ந்து, இப்பகுதியில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு, மர்ம கும்பல் திருடி வருவது தொடர் கதையாக உள்ளது. எனவே, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் எனவும், இப்பகுதியில் சிசிடிவி கேமரா அமைத்து, கண்காணிக்க வேண்டும் எனவும், அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News