தொடர் மழையால், நிலக்கடலை விவசாயம் பாதிப்பு:
அலங்காநல்லூர் பகுதிகளில், தொடர் மழையால் நிலக்கடலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்
மதுரை மாவட்டம் ,அலங்காநல்லூர் பாலமேடு, முடுவார்பட்டி ,ஆதனூர், சேந்தமங்கலம் ,சத்திர வெள்ளாளப்பட்டி, வளையப்பட்டி, மரவப்பட்டி, ராஜாக்கள் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நிலக்கடலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏக்கருக்கு சுமார் 25 மூடை கிடைக்க வேண்டிய இடத்தில் 10 மூடை மட்டுமே கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 90 நாட்களில் அறுவடையாகும் சமயத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக மகசூல் காலம் 120 நாட்களாக உயர்ந்து, நிலக்கடலை விளைச்சலுக்கான செலவு அதிகரித்துள்ள கூறினர். மேலும், மார்க்கெட்டில் விலை இல்லாததால் செலவழித்த பணத்தை எடுக்க முடியவில்லை என்றும், உரிய காலத்தில் மழை பெய்யாததால் நிலக்கடலையில் நீர்ச்சத்து பிடித்து சுவை மாறி இருப்பதால் விலை போகவில்லை என்றும் கூறுகின்றனர்.
மேலும், சாத்தையாறு அணை மூலம் உரிய காலத்தில் தண்ணீர் கொண்டு வந்தால் நிலக்கடலை மகசூல் இருக்கும் என்றும், புரட்டாசி மாதமே அறுவடை செய்திருக்க வேண்டிய சூழலில் ஐப்பசி முடியப்போகும் நிலையில் விளைச்சல் இல்லாததால் அறுவடை செய்ய முடியவில்லை என்றும் கூறினர்.
நிலக்கடலை விலை பொருள் வாங்கும்போது, கிலோ 150 ரூபாய்க்கு வாங்குவதாகவும் ஆனால், அறுவடைக்கு பின்பு ஒரு கிலோ நிலக்கடலை 25 ரூபாய்க்கு விற்பதால் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் ,நிலக்கடலையை சேமித்து வைக்க சேமிப்பு கிடங்கு ஒன்றை இப்பகுதியில் ஏற்படுத்தினால், சேமித்து வைத்து உரிய விலை கிடைக்கும் போது விற்று லாபம் எடுக்கலாம் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய் செலவு செய்வதாகவும் ஒரு மாதம் கூடுதலாக சென்றதால் 4 மாதத்திற்கு 12 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாகவும் அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்றும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் ஆகையால் நிலக்கடலை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.