சோழவந்தான் அருகே கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
கட்டக்குளம் கண்மாய் ஆக்கிரமிப்புக்கள் அதிகமாக இருப்பதால், பல ஆண்டுகளாக தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கட்டக்குளம் கண்மாய் ஆக்கிரமிப்புக்கள் அதிகமாக இருப்பதால், பல ஆண்டுகளாக தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 1200 ஏக்கர் விவசாயம் பாதித்து வருகிறது. கடந்த அரசு குடிமராமத்து பணி செய்வதற்கு சுமார் 66 லட்சம் ரூபாய் ஒதுக்கியதாக தெரிகிறது. ஆனால், முறையாக கண்மாய் தூர்வார வில்லை கரைகள் மட்டும் கண்மாயில் இருந்த மண்ணை வைத்து உயர்த்தி உள்ளதாக தெரிகிறது. கண்மாய் மதகுகளும் முறையாக செப்பனிடவில்லை .இந்தக் கண்மாய் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இதில், சுமார் 200 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதி ஆகும்.இந்த கண்மாயில் நடு மடை,செங்கமடை, பள்ளமடை ஆகிய மூன்று மடைகள் உள்ளன. இதன் மூலம், நஞ்சை நிலம் சுமார் 950 ஏக்கர்,புஞ்செய் நிலம் சுமார் 40 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த கண்மாய் மூலம் 900 ஏக்கர் முதல் போகம் விவசாயமும், 1200 ஏக்கர் இருபோக விவசாயமும் நடந்து வந்ததாகவும், தற்போது, இந்தக் கண்மாய் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் சேமிக்க முடியாத நிலையில் உள்ளது. பெரியார் பாசன வாய்க்காலில் இருந்து வரக்கூடிய தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலையில் கண்மாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருவதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து, முன்னாள் ரிஷபம் ஊராட்சிமன்றத் தலைவர் பழனியப்பன் கூறும்போது:- தற்போது, பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் கண்மாய் நிரம்பி மறுகால் செல்கிறது. எங்கள் கண்மாய் தண்ணீர் நிரம்பவும் இல்லை. மறுகால் வழியாக தண்ணீர் வரவில்லை. அந்த அளவுக்கு எங்கள் கண்மாய் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையில், மேடான பகுதியாக உள்ளது. இதை அரசு போர்க்கால அடிப்படையில் முழுமையாக தூர்வார வேண்டும்.
ஏற்கெனவே, சுமார் 10 அடிக்கு மேல் மேடான பகுதியாக மரங்கள் வளர்ந்துள்ளன. இதை முழுமையாக அப்புறப்படுத்திகண்மாயை முறையாக தூர்வார வேண்டும். இதில், உள்ள வண்டல் மண்ணை விவசாயத்திற்கு விவசாயிகள் அள்ளி செல்வதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். கடந்த அரசு கண்மாயை தூர்வார குடிமராமத்து பணி என்ற பெயரில் சுமார்66 லட்சம் செலவில் வேலை நடந்ததாக கூறுகின்றனர். எங்களுக்குத் தெரிந்து இந்தக் கண்மாயை குடிமராமத்து பணி எதுவும் நடக்கவில்லை.
ஆகையால், தமிழக அரசு விவசாயிகள் மீது முழு கவனம் செலுத்தி கட்டக்குளம் கண்மாயில் முழுமையாக ஆக்கிரமிப்பை எடுத்து,முறையாக தூர்வாரி,மதகுகள் செப்பனிட்டு கண்மாயில் முழு கொள்ளளவு தண்ணீர் சேமித்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித் துறையும் போர்க்கால அடிப்படையில் இந்த வேலையை செய்திட வேண்டும் என்று கூறினார்.
மேலும், விவசாயி காசிநாதன் கூறும்போது:- கண்மாயில், தண்ணீர் திறக்க முடியவில்லை 240 ஏக்கர் பரப்பளவு உள்ள கண்மாயில் ஒரு ஏக்கர் தண்ணீர் கொடுக்க முடியவில்லை. வைகை அணையில் தண்ணீரை ஒரு நாள் நிறுத்தினாலும் கண்மாய்க்கு தண்ணீர் வருவதில்லை மேலும், பாசன பகுதியான ரிஷபம், ராயபுரம், திருமால் நத்தம், தேனூர், அய்யன்கோட்டை, நெடுங்குளம் போன்ற எட்டு கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில், ரிஷபம் மட்டும் சுமார் 1100 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆகையால் முழுமையாக தண்ணீர் தேக்கினால் மட்டுமே சுற்றியுள்ள கிராமங்களில் நீர் ஆதாரம் முழுமையாக கிடைக்கும் .மேலும், மழை அதிகமாக பெய்தால் தண்ணீரைத் தேக்கி வதற்கு உரிய சட்ட வசதிகள் இல்லை ஆகையால், அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனே நேரில் பார்வையிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று கூறினார்.