சோழவந்தானில் மின் கணக்கீட்டில் குளறுபடி : பொது மக்கள் வாக்கு வாதம்..!
சோழவந்தானில் மின் கணக்கீட்டில் குளறுபடிகள் நடப்பதாக மின் கணக்கீட்டாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோழவந்தானில் மின் கணக்கீட்டில் குளறுபடிகள் நடப்பதாக மின் கணக்கீட்டாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை 1வது வார்டு, பகுதியில் மின் கணக்கீட்டை மின்சார அட்டையில் குறித்து வைக்க வேண்டுமென, கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
சோழவந்தனை சேர்ந்த மின் கணக்கீட்டாளர் காமிலா. இவர் சோழவந்தான் மின்சார வாரியத்தில் கணக்கீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை சோழவந்தான் பேட்டை 1வது வார்டு பகுதியில் மின் கணக்கீடு எடுப்பதற்கு வீடுகளுக்கு சென்றபோது, வீடுகளில் இருந்தவர்கள் மின் அட்டையில் மின்சார பயன்பாட்டிற்கான, கணக்கீட்டு அளவை குறித்து வைக்குமாறு கூறியுள்ளனர்.
அதற்கு கணக்கீட்டாளர் காமிலா அதிகாரிகள் அட்டையில் குறித்துவைக்க வேண்டாம். கணக்கீடு மட்டும் எடுத்து மொபைலில் குறித்து வரவும் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் செல்போனில் கணக்கீட்டின்படி மின் பயன்பாட்டு தொகையினை குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கலாம். கடந்த சில மாதங்களாக அவ்வாறு தான் மின்சார வாரியம் அனுப்பி வைக்க அதிகாரிகள் கூறியுள்ளதாக கூறி அட்டையில் குறிக்க மறுத்துள்ளார்.
இதனை அடுத்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அட்டையில் குறித்தால்தான் மின் கணக்கீட்டை எடுக்க விடுவோம் இல்லையென்றால், மின் கணக்கீட்டை எடுக்க விடமாட்டோம் எனக்கூறி மின் கணக்கீட்டாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
இது குறித்து, 1வது வார்டு அதிமுக செயலாளர் முத்துக்குமார் கூறுகையில்,ஒரு சில வீடுகளில் மொபைல் போன் வசதி இல்லாத நிலையில் அனைவருக்கும் எப்படி குறுஞ்செய்தியை அனுப்ப முடியும்? மேலும், மின் அட்டையில் குறித்தால் தான் மின் கட்டணம் கட்ட வேண்டிய கடைசி தேதி எதுவென்று தெரிந்துகொள்ள முடியும். இல்லையென்றால், தேவையில்லாத அபராத தொகையுடன் மின்சார கட்டணம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.
ஆகையால், மின்னட்டையில் குறித்தால்தான் மின் கணக்கீட்டை எடுக்கவேண்டும் எனவும், இது குறித்து வருகின்ற திங்கட்கிழமை மின்வாரிய அலுவலகத்தில் சென்று அதிகாரிகளிடம் முறையிட போவதாக தெரிவித்தார்.
இது குறித்து, மின் கணக்கீட்டாளர் காமிலாவிடம் கேட்டபோது, அதிகாரிகள் வாய்மொழியாக அட்டையில் குறிக்க வேண்டாம். கணக்கு மட்டும் எடுத்து வந்தால் போதும் என, கூறியுள்ளனர் என தெரிவித்தார்.
இது குறித்து, மின்சாரத்துறை வருவாய் அலுவலரிடம் கேட்டபோது, அட்டையில் குறித்து வைக்க வேண்டாம் என, அரசு கூறியுள்ளதாக கூறினார். ஆனால், சோழவந்தான் உதவி செயற்பொறியாளரிடம் கேட்டபோது, அட்டையில் குறித்து வைப்பதற்கு பணியாளரிடம் அறிவுறுத்தப்படும் என கூறினார்.
அதிகாரிகள் இருவரும் முரண்பட்ட தகவல்களை கூறியதால் மின் கணக்கீட்டாளர் காமிலா என்ன செய்வதென்று தெரியாமல் மின் கணக்கீடு எடுக்காமல் திரும்பிச்சென்று விட்டார்.
இது குறித்து, பொதுமக்கள் மேலும் கூறுகையில் வரும் திங்கட்கிழமை அன்று சோழவந்தான் மின்சார அலுவலகத்திற்கு , பொது மக்களை திரட்டி நேரில் சென்று விளக்கம் கேட்கப்போவதாகவும் அதற்கு பின்பு மின் கட்டண அளவை எடுக்கச் சொல்ல போவதாகவும் தெரிவித்தனர்.