மதுரை அருகே குழாயில் உடைப்பால் வீணாகும் குடிநீர்
அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து வீணாகும் தண்ணீரை முறையாக பயன்படுத்த வேண்டும்;
மதுரை மாவட்டம், இரும்பாடி வைகை ஆற்றில் இருந்து மன்னாடிமங்கலம் காடுபட்டி வழியாக திருமங்கலம் நகராட்சிக்கு குடிநீர் தேவைக்காக பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதில், காடுபட்டி பகுதியில் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. குறிப்பாக காடுபட்டி ஊரின் முன்பாக தென்கரை கண்மாய் செல்லும் பாதைக்கு அருகே ஒரு பெரிய உடைப்பு ஏற்பட்டு அதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் வீணாகும் தண்ணீர் குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.வீணாகும் தண்ணீரால், அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் பாழாகி வருகின்றன.
இது குறித்து, தமிழ் நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம், மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து வீணாகும் தண்ணீரை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தற்போது உள்ள பருவ நிலையின் காரணமாக மழையின் அளவு குறைந்து வருகிறது எதிர்வரும் காலங்களில் அதிகப்படியான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது அதனை கருத்தில் கொண்டு இரும்பாடி முதல் திருமங்கலம் வரை உள்ள அனைத்து உடைப்புகளையும் சரி செய்ய வேண்டும்.
அதே சமயத்தில் மதுரை நகரில் அண்ணா நகர், தாசில்தார் நகர், வீரவாஞ்சிதெருவில், கடந்த 15 தினங்களாக குடிநீர் குழாய்களில் வருவதில்லை என்றும், பாதாளசாக்கடை பணிக்காக மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் இயந்திரம் மூலம் தோண்டும் போது, குடிநீர் குழாயில் உடைக்கப்பட்டு, சுமார் 20 நாட்களாகியும் உடைக்கப்பட்ட குழாய்களை, மதுரை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாததால் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை என, வீர வாஞ்சி தெரு பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, மேலமடை மாநகராட்சி உதவி பொறியாளர், மற்றும் உதவி ஆணையர் கவனத்திற்கு இப்பகுதி மக்கள் கொண்டு சென்றும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப் படும் போது, உடைந்த குழாய்களை சரி செய்ய ஆர்வம் காட்ட வில்லையென கூறப்படுகிறது.
இது குறித்து, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் செயற்பொறியாளர் பொறியாளர் ஆகியோர் துரித நடவடிக்கை எடுத்து, வீரவாஞ்சி தெரு பகுதி மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், விரைவில் குடிநீர் வழங்க கோரி மேலமடை மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மதுரை நகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை பணிக்காக அவ்வப்போது பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாயில் பதிக்கப்படுகிறது. அவ்வாறு பதிக்கும்போது உடைந்து விடும் குழாய்களை, சீர் செய்ய ஒப்பந்தக்காரர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.