மக்கள் மீது அக்கறை இல்லாத தி.மு.க. அரசு: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
மக்கள் மீது அக்கறை இல்லாத தி.மு.க. அரசு என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டி உள்ளார்.;
மக்கள் மீது அக்கறை இல்லாத தி.மு.க. அரசு வாரிசுகளைப் பற்றி சிந்திப்பதை கடமையாகக் கொண்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க சார்பாக , கழக நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, ஒன்றிய கழகச் செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.பகுதி பொறுப்பாளர் தண்டரை மனோகரன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம், ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.வீ. கருப்பையா, சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.மணிமாறன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தில், கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் பேசியதாவது:-
தி.மு.க அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக, செயல்படாத அரசாக, வளர்ச்சியை பற்றி சிந்திக்காத அரசாக, தன்னுடைய வாரிசுகளை மட்டும் பற்றி சிந்திப்பதை கடமையாக கொண்டுள்ள முதலமைச்சரை இந்த நாடு பெற்றிருப்பது வேதனையிலும் வேதனையாக உள்ளது. மக்கள் இந்த அரசின் மீது அதிருப்தியோடு இருக்கிறார்கள். அதை வாக்குகளாக மாற்றுபவர்கள் யார், தொண்டர்களாக இருக்கின்ற கிளைக் கழக செயலாளராக இருக்கின்ற பூத் கமிட்டி உறுப்பினராக இருக்கின்ற நீங்கள் தான். அதை வாக்குகளாக மாற்ற முடியும். இங்கு இருப்பவர்கள் எல்லாம் வருவார்கள் கும்பிடுவார்கள் வாக்கு கேட்பார்கள் நீங்கள் வாக்கு வாங்கி கொடுத்தால் அந்த வெற்றிக்கனியை கொண்டு போய் சமர்ப்பிப்பார்கள்.
இதில், களத்தில் நின்று போராடி எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து இயக்கத்தின் ஆணிவேராக கட்டிக் காக்க கூடியவர்கள் இயக்கத்தின் கிளைக் கழக செயலாளர்களும் பூத்து கமிட்டி உறுப்பினர்களும் தான். ஆகவே, உங்களை எப்போதும் வலிமையோடு வைத்திருக்க வேண்டும் என்று கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.
அதனால்தான் வலிமை உள்ள பூத் கமிட்டியை அமைக்க வேண்டும். இங்கு நான்காவது கட்டமாக நடக்கும் பூத் கமிட்டி கூட்டத்தில், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் தற்போது 80 சதவீதம் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளது. அதை 100 சதவிகிதமாக மாற்ற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
இன்றைய தினம் நாட்டில் நடக்கும் கூத்துகளையெல்லாம் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ரோட்டில் ஓட்டாமல் மேட்டில் தரை விரிப்பில் ஓட்டும் புல்லட் பாண்டியாக அறிவிக்கப்படாத முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் தவப்புதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான். அவர் இளைஞரணி மாநாட்டிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கூறுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலயமணி, பாண்டுரங்கன், தெய்வ தர்மர், தக்காளி முருகன், விசு, ஜெயராமன், மலைச்சாமி, பிச்சை, மூர்த்தி, செந்தில், பாலாஜி, பாஸ்கரன், கருப்பட்டி ராமநாதன் சந்திரபோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில், கோட்டைமேடு பாலன் நன்றி கூறினார்.