குருப்பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி: ஆட்சியர் தகவல்
சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும்
பொது மக்கள் கோரிக்கையை ஏற்று குருபெயர்ச்சி விழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.
சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் குருபெயர்ச்சி விழா இன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி, காவல்துறையினர் இன்றும்,நாளையும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தனர். இதனால், பக்தர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தனர். இதன்பேரில், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், வட்டாட்சியர் நவநீதகிருஷ்ணன், சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் பாலசுந்தர்,இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் விஜயன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் பாண்டியன், சத்தியகலாவதி, வருவாய் ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதன்பின், குருவித்துறை குருபகவான் குருபெயர்ச்சி முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். இருந்தபோதிலும், பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.