மதுரை அருகே கோயிலில் தனி நபர் ஆதிக்கத்தை தடுக்க கோரிக்கை
தேனூர் கிராம பொது கோவிலில் தனி நபர் ஆதிக்கம் செலுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
மதுரை மாவட்டம், தேனூரில் கிராம பொதுமக்கள் வழிபடும் அழகுமலையான் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலின் பெயரைச் சொல்லி வெளிவட்டாரத்தில் நிதி வசூல் நடப்பதாகவும். கிராம மக்கள் பயன்பாட்டில் உள்ள நெல் உலர்த்தும் களம், ஆக்கிரமிக்கப்படுவதாகவும், நாடக மேடைக்கு இடையூறு இருப்பதாகவும் இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனடிப்படையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தி கிராம பொதுமக்கள் வழிபாட்டிற்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையிலும் பொதுமக்களின் நெல் உலர்த்தும் களம் மற்றும் நாடக மேடைக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறுகின்றனர்.
இதுகுறித்து, தேனூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சோனைமுத்து கூறும்போது, தேனூரில், உள்ள அழகுமலையான் கோவில் சுமார் 300 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த கோயில் பொறுப்புகளை கடந்த சில மாதங்களாக எனது பொறுப்பில் இருந்து கவனித்து வந்தேன். தற்போது ,தனி நபர் கோயில் இடத்தில் நாடக மேடை மற்றும் நெல் களம் அகியவற்றை மறித்து வேலைகள் செய்து வருகிறார் . மேலும், கோவில் அருகில் மண்டபத்தைக் கட்டி அதில் தங்கி இருக்கிறார். ஆகையால், மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, தனிநபர் பயன்படுத்தி வரும் இடத்தை பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் பாலு கூறும்போது, தேனூரில், அழகுமலையான் கோவில் முன்புறம் உள்ள நாடக மேடையை மறித்தும் அருகில் உள்ள நெல் கொட்டும் களத்தை மறித்தும் தனிநபர் பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில், நேரில் சென்று பார்வையிட்டு முறைப்படி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்து கூறியதன் பேரில் வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.