சோழவந்தான் சார்- பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவில் தவறு என புகார்
சோழவந்தான் சார்- பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவில் தவறு நடந்து இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.
சோழவந்தானில் போலியாக பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்யக்கோரி, சார் பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலி. இவருக்கு 1959 ஆம் ஆண்டு அரசு முள்ளிபள்ளம் மற்றும் வடகாடுப்பட்டி பெரியார் நகர் பகுதியில் 69 சென்ட் இடத்தை வழங்கியிருந்தது. இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் மற்றும் இவர்களின் வாரிசுகளாக எட்டு பேர் தற்போது இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வாரிசுதாரர்கள் தனது பாட்டியான வேலியின் பெயரில் இருந்த 69 சென்ட் இடத்தை அளப்பதற்கு கடந்த 2023 டிசம்பரில் பணம் கட்டியுள்ளனர் .
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 1ஆம் தேதி இடத்தை அளக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அப்போது, இருந்த சர்வேயர் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் ஆகியோர் தேர்தல் முடிந்த பிறகு அளந்து கொடுப்பதாக கூறிய நிலையில் தேர்தல் முடியட்டும் என இருந்தனர்.
இந்த நிலையில், தேர்தல் விதிமுறைகள் இருந்த நிலையில் சோழவந்தான் சார் பதிவாளரை வைத்து வேலியின் பட்டாவை இணைத்து வேறொருவர் பெயருக்கு அதாவது ஜெயராமன் மற்றும் சீனிவாசன் தந்தையின் பட்டாவை பதிய முற்படும்போது வேலியின் 69 சென்ட் இடம் உள்ள பட்டாவை மட்டும் வைத்து போலியாக பத்திர பதிவு செய்துள்ளனர் .
இந்த நிலையில், ஏற்கனவே அதிகாரிகள் சொன்னதின் பேரில் தேர்தல் முடிந்த பிறகு சர்வேயர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை சந்தித்து இடத்தை அளக்க வரும்படி கேட்டபோது, அவர்கள் அந்த வேலியின் பெயரில் உள்ள பத்திரம் தற்போது வேறொரு பெயருக்கு மாறியுள்ளதாக கூறினார்கள். அதாவது தானியங்கி முறை மூலம் வாரிசுதாரர்கள் வராமலேயே தானியங்கி பதிவு என்று சொல்லக்கூடிய முறை மூலம் பத்திரப் பதிவு செய்துள்ளதாக வேலியின் வாரிசுதாரர்களுக்கு தெரிய வந்தது .
இது குறித்து, சோழவந்தான் சார் பதிவாளரை நேரில் சந்தித்து வேலியின் வாரிசுகள் அனைவரும் கேட்டபோது 1964-இல் உள்ள மூல பத்திரத்தை வைத்து தான் பதிந்தேன் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து, சார்பதிவாளரிடம் வேலியின் வாரிசான சிவபெருமான் 1959க்கு பின்பு பெறப்பட்ட அனைத்து வில்லங்க சான்றிதழ்களிலும் எந்த ஒரு ஆவண எண் பதியப்படவில்லை என, ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு சான்று வழங்கியுள்ள நிலையில் தற்போது 1964-இல் ஆவணம் வைத்து பதிந்துள்ளது என்று எவ்வாறு கூறுகிறீர்கள் என கேட்டதற்கு, சோழவந்தான் சார் பதிவாளர் எந்த ஒரு பதிலையும் தரவில்லை.
இது சம்பந்தமாக மாவட்ட பதிவாளரை அணுகி மனு கொடுக்கும் படியும், மாவட்ட பதிவாளர் விசாரணை செய்து தவறான பத்திரப்பதிவு நடந்திருந்தால் பத்திரத்தை உரியவர் பெயருக்கு மாற்றி தர நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக வேலியின் வாரிசான சிவபெருமான் கூறினார்.
இது குறித்து, சோழவந்தான் சார் பதிவாளரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பத்திரப்பதிவில் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் பதிவை ரத்து செய்யும் உரிமை மாவட்ட பதிவாளருக்கு மட்டுமே உள்ளது என்றும், ஆகையால் மாவட்ட பதிவாளரை முறையாக அணுகி அவர்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
வேலியின் வாரிசுகள் இது குறித்து தாவா மனு ஒன்றும் அளித்துள்ளார்கள். மேலும், தாவா மனு வழங்கும் போது சோழவந்தான் சார் பதிவாளர் அதை புகைப்படம் எதுவும் எடுக்க வேண்டாம் என, செய்தியாளரிடம் கூறினார்.
இதனால் இந்த பத்திரப்பதிவில் முறைகேடு நடந்திருப்பது உண்மை என வேலியின் வாரிசுகள் மற்றும் பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர்.
ஆகையால் மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இதுகுறித்து உரிய விசாரணை செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் போலியாக பெயர் மாற்றம் செய்த பத்திரப்பதிவை ரத்து செய்து வேலியின் பெயருக்கு மீண்டும் பதிவு செய்து தர வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர்.