சோழவந்தான்: பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம்

சோழவந்தான் பகுதியில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.

Update: 2023-11-08 10:02 GMT

சோழவந்தான் பகுதியில் பலத்த மழையால்  அறுவடைக்கு தயாராக இருந்த வயலுக்குள் புகுந்த மழை நீர்.

சோழவந்தான் பகுதியில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் சேதம் அடைந்தன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில், பெய்து வரும் தொடர்மழை காரணமாக சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பகுதிகளில் நடவு செய்த நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தற்போது பெய்து வரும் கனமழையால் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ஒருவர்.

குறிப்பாக இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் 100 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்து தற்போது, அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வயல்களில் உள்ள நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக, ஒருபோக சாகுபடி மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும் என்ற சூழ்நிலையில், கிணற்று பாசனத்தில் நடவு செய்து அறுவடை காலத்தில் மழை பெய்ததால் ஏக்கருக்கு 30,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆகையால் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மாவட்டம் முழுவதும் சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு சேதம் அடைந்த நெற்பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News