சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய பூக்குழி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா பூக்குழி விழா நடைபெற்றது

Update: 2023-06-01 09:45 GMT

 ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 10ம் நாள் திருவிழா பூக்குழிதிருவிழா நடைபெற்றது.

மதுரை அருகே சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 10ம் நாள் திருவிழா பூக்குழிதிருவிழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு, நேற்று மாலை அர்ச்சகர் சண்முகவேல் மேளதாளத்துடன் வைகைஆற்றுக்கு சென்று அங்கு அக்னிகரகம் ஜோடித்து பூஜைகள் செய்தார். அங்கிருந்து புறப்பட்டு வடக்கு ரதவீதி, மார்க்கெட் ரோடு வழியாக பூக்குழி பொட்டல் வந்தனர்.கோவில் அர்ச்சகர் சண்முகவேல் கரகத்துடன் பூக்குழி இறங்கினார்.

இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் உட்பட நிறைவாக மணிகண்டன் என்பவர்(21) அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்கினர். சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் ,கோவில் செயல் அலுவலர் இளமதி,எம்விஎம் குழுமத்தலைவர் மணி முத்தையா, வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன்,சத்யபிரகாஷ்,சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமார், கோவில் பணியாளர்கள் பூபதி,கவிதா,வசந்த்,பெருமாள் உட்பட ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சமயநல்லூர் டிஎஸ்பிபாலசுந்தரம்,  ஆய்வாளர்  சிவபாலன் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்பு  நிலைய அலுவலர் பசும்பொன்,போக்குவரத்து அலுவலர் கண்ணன் உள்பட தீயணைப்பு படையினர் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலின் மகத்துவம்...

இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.1000-2000 வருடங்களுக்கு முன் பழமை வாய்ந்த ஆலயம்.பசுமை மிகுந்த சோழவந்தான் நகரை சுற்றியுள்ள 48 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிக சிறப்பாக தங்கள் குல தெய்வமாக போற்றி வணங்கும் சக்தி வாய்ந்த மாரி வீற்றிருக்கும் சிறப்பு மிகுந்த தலம்.

எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவ கோயில் இது. வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் சதுர்வேதிபுரம், அனந்தசாகரம், ஜனகையம்பதி என்றெல்லாம் போற்றப்படும் கோயில்.அனைத்து ஜீவ ராசிகளையும் பரிபாலனம் செய்ய உலகில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐங்கீர்த்தியங்களையும் செய்து பிறவிப்பெரும் பயனை அடைய வைக்கும் ஆலயம்.

அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும் அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும்.

மதுரை அருகிலுள்ள புண்ணியத்தலம், சோழவந்தான்.பூஜை மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் வெற்றிலை இல்லாமல் இருக்காது.ராமனின் வெற்றிச் செய்தியை அறிவித்தவுடன், சீதாபிராட்டி, அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து, பாராட்டினாள் என்ற செவி வழி செய்தியுண்டு.அத்தகைய சிறப்புமிக்க வெற்றிலை, அதிகமாக விளையும் சோழவந்தானில் கோவில் கொண்டுள்ளாள், ஜெனகை மாரியம்மன்.

இந்த மாரியை, ஜனக மகாராஜா வணங்கியதாக தல வரலாறு கூறுகிறது. இதனால், இவள், ‘ஜனகை மாரி’ எனப்பட்டு, ‘ஜெனகை மாரி’ என்ற பெயர் மாற்றம் பெற்றாள்.அம்மனுக்கு பின்புறம் ஆக்ரோஷ நிலையில் காட்சி தருகிறாள், ரேணுகாதேவி. இவளை, ‘சந்தனமாரி’ என்கின்றனர்.இக்கோவிலில், வைகாசி திருவிழா, 17 நாட்கள் நடக்கும். மாரியின் மகத்துவமான அருளைப் பெற சோழவந்தான் சென்று வரலாம்.


Tags:    

Similar News