5 ஆண்டுகளாக நிறைவேறாத சோழவந்தான் மேம்பாலம்: காற்றில் பறந்த தேர்தல் வாக்குறுதி
தேர்தலின்போது, திறப்பதாக சொன்ன எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்குறுதிகள் காற்றோடு கரைந்து போனது.
மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி இணைக்கும் வகையில், ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும், செயல்படவில்லை. தேர்தலின்போது, திறப்பதாக சொன்ன எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்குறுதிகள் காற்றோடு கரைந்து போனது.
சோழவந்தானில் ரயில்வே கேட் வழியாக சோழவந்தான் வாடிப்பட்டி இணைக்கும் ரோடு செல்கிறது. ரயில்வே கேட் வழியாக தினமும் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கின்றன. இதனால், கால் மணி நேரத்துக்கு ஒருமுறை , கேட் மூடப்பட்டு வாகனங்கள் இருபுறமும் காத்துக்கிடக்க வேண்டும். இதனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. மத்திய அரசு சார்பில் ரயில்வே தண்டவாளங்களில் மேல் பகுதியில் இணைப்பு பாலம் கட்டப்பட்டது. பாலத்தை பகுதியோடு இணைப்பதற்கு 5 அடி தூரம் வரை இருபுறமும் மாநில அரசு சார்பில் மேம்பாலம் கட்டப்பட்டது .
ரூபாய் 20 கோடிக்கு மேல் செலவு செய்த நிலையில், பாலத்தின் இருபுறமும் தரையோடு இணைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. மேம்பாலம் கட்டி மூன்று ஆண்டுகளாகியும், இன்னும் இணைக்கப்படாத ரயில்வேகேட் வழியாகவே வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது.
இப்பகுதி பொதுமக்கள் போராட்டம், ஆட்சியருக்கு மனு என, எத்தனையோ வழிகளில் முயற்சித்தும், பாலம் இணைப்பு இதுவரை முடியவில்லை . தொகுதி எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம், தற்போதைய திமுக எம். எல். ஏ. வெங்கடேஷ் மற்றும் தேனி அதிமுக எம்பி ரவீந்திரநாத் ஆகியோர் பாலத்தை விரைவில் திறப்பதாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் ,வெற்றி பெற்ற பின்பு யாருமே பாலத்தை தரையுடன் இணைத்து போக்குவரத்தை சீர் படுத்த நடவடிக்கை எடுக்கவில்லையாம். அடுத்த தேர்தல் அறிக்கையிலும் விரைவில் இந்த பாலத்தை கட்டி முடிப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் இடம்பெறும் என இப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் வேலை முடிக்காத இப்பாலம் திறப்பதற்கு காரணம் என அதிகாரிகள் கூறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் திறக்கப்படாமல், உள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் இப்பகுதியில் வாடிப்பட்டி சோழவந்தான் செல்லவோ மிகவும் சிரமமாக இருப்பதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.