வரும் 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்: அண்ணாமலை நம்பிக்கை
வரும் 2026-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று, அக்கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம், மதுரை சோழவந்தான் பகுதியில் உள்ள எம்விஎம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில செயலாளர், சோழவந்தான் எம் வி எம் குழுமத் தலைவர் மணி முத்தையா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி ஆகியோர் பேசினர்.
பாஜக வேட்பாளர்களை மாநில தலைவர் அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் கண்டிப்பாக பாஜக ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. பொங்கல் பரிசு தொகுப்பில் தமிழக மக்களுக்கு உபபோயகம் இல்லாத பொருட்களாக வழங்கியுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பில் விவசாயிகளிடம் இருந்து 25 ரூபாய்க்கு கரும்புகளை அரசு கொள்முதல் செய்து, அதனை 40 ரூபாய்க்கு ரேசன்கடைக்கு வழங்கினர்.
தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 50 லட்சம் கரும்புகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ததில், ரூ.33 கோடி கரும்பில் திமுக அரசு ஊழல் ஊழல் செய்துள்ளது. மஞ்சள் பை வாங்கியதிலும் ஊழல் 10 ரூபாய்க்கு வாங்கவேண்டிய மஞ்சள் பையை ரூ.60 ரூபாய் கொடுத்து வாங்கி, பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்க வழங்கியுள்ளது. எதிலும் திமுக அரசு ஊழல்தான் செய்து வருகிறது. பாஜக தமிழகத்தில் முத்திரை பதித்து தனித்தன்மையை இந்த உள்ளாட்சி தேர்தலில் நிரூபிக்கும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் ஆதி குளோபல் ஆதிசங்கர், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்த மூர்த்தி, ஊடகப்பிரிவு தங்கவேல் சாமி, வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் திருமுருகன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணன் மகேந்திரன் ஒன்றிய தலைவர் முருகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் மாயாண்டி உள்ளிட்டோரும் மதுரை புறநகர் பகுதிகளான மேலூர் உசிலம்பட்டி திருமங்கலம் நகராட்சி வார்டு வேட்பாளர்கள் மற்றும் சோழவந்தான் அலங்காநல்லூர் பாலமேடு வாடிப்பட்டி ஏழுமலை, பறவை பேரையூர் டீ கல்லுப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்