சோழவந்தான் அருகே குளியல் தொட்டி கட்டுவதில் பிரச்னை: எம்எல்ஏ சமரச முயற்சி

குளியல் தொட்டி கட்டும் பிரச்சனையில் தீர்வு ஏற்படாமல் போனது பொது மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியது

Update: 2023-11-30 17:15 GMT

சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளியல் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை சமாதானப்படுத்திய சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்:

சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளியல் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் சமாதானப்படுத்தினார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், முள்ளி பள்ளம் கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 2020 21ஆம் நிதி ஆண்டின் திட்டத்தின் கீழ், முள்ளி பள்ளம் ஒன்றியக் கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன் ஏற்பாட்டில், குளியல் தொட்டி கட்ட முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ,இதற்கு கிராமத்தின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், எதிர்ப்பு தெரிவித்த சிலர் மாற்று இடத்தில் கட்டுவதற்கு யோசனை தெரிவித்தனர். இதனால் கிராமத்தினர் இரு பிரிவாகும் சூழ்நிலை ஏற்பட்டது . இந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர், கிராம பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் இரு தரப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி தங்கள் கருத்துகளை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதை தொடர்ந்து, வாக்குவாதத்தை கட்டுப்படுத்த முடியாத எம்.எல்.ஏ. இரு தரப்பினரையும் அழைத்து இன்னும் ஒரு வாரம் கழித்து வாடிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் இதற்கான பேச்சு வார்த்தை நடைபெறும் என்று கூறிச் சென்றார்.

பொதுமக்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், குளியல் தொட்டி கட்ட முனைந்ததாகவும் அதற்கு சிலர் சுயநல நோக்கில் தடுப்பதாகவும் ஒன்றியக் கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன் தெரிவித்தார். முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வீடு வீடாக சென்று பொது மக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். இருந்தாலும், சமாதானம் அடையாத பொது மக்கள் இரு பிரிவினராக இருந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ,குளியல் தொட்டி கட்டும் பிரச்னையில் தீர்வு ஏற்படாமல் சென்றது. பொது மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News