கல்விக்கடன் வழங்குவதில் வரலாற்றுச் சாதனை படைத்த மதுரை

கடந்த ஆண்டு இலக்கைத் தாண்டி நடப்பு கல்வி ஆண்டில் மதுரை மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது

Update: 2024-02-14 13:02 GMT

கல்வி என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான முதலீடுகளில் ஒன்றாகும். ஒரு சிறந்த கல்வி தகுதி உயர் சம்பளம், சிறந்த வாழ்க்கைத் தரம் போன்ற பல நன்மைகளைத் தரலாம். இருப்பினும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியின் அதிகரித்து வரும் செலவுகள் பல மாணவர்களுக்கு உயர்கல்வியைத் தொடர்வதை பெரும் சவாலாக்குகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு, கல்விக் கடன் இந்த இடைவெளியை இணைக்கவும், அவர்களது கல்வி இலக்குகளை அடையவும் உதவுகிறது.

கல்விக் கடன் என்பது கல்விச் செலவுகளைச் சமாளிக்க மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகை நிதி உதவியாகும். இந்த செலவுகளில் டியூஷன் கட்டணம், புத்தகங்கள் மற்றும் விடுதிச் செலவுகள் ஆகியவை அடங்கும். கல்விக்கடன்களுக்கு வழக்கமாக குறைந்த வட்டி விகிதங்கள் உள்ளன. மாதாந்திர தவணை முறைகளில் பட்டம் பெற்ற பிறகு மாணவர்கள் அவற்றைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கலாம்.

2023-2024 கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-2024 கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்க மாவட்ட நிர்வாகமும் வங்கி நிர்வாகமும், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் இணைந்து கூட்டாக விரிவான முயற்சி எடுத்தன. கடந்த 24.11.2023 அன்று மாவட்டம் முழுமைக்குமான கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கல்விக்கடன் பற்றி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஆண்டு தரப்பட்ட ரூ.125 கோடி என்ற இலக்கைத் தாண்டி, இந்த ஆண்டு ரூ.168.28 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 2,627. இவர்களில் 2,078 பேருக்கு 168.28 கோடி ரூபாய் கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 79 சதவீதம் பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்

Tags:    

Similar News