கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து ரவுடி எஸ்கேப்
மதுரையில், கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து தப்பியோடிய ரவுடியை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை, மதிச்சியம் சப்பானி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம். அவரது மகன் மீனாட்சி சுந்தரம் (23). இவர் மீது மதுரை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வைகை வடகரையில் அமைந்துள்ள மதீனா பள்ளிவாசல் அருகே கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் கஞ்சா விற்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் அதிரடியாக போலீசார் சோதனை நடத்தினர். போலீசாரை கண்டதும் மர்ம கும்பல் ஓட்டம் பிடித்தது.
எனினும், இரண்டு பேர், போலீசாரிடம் வசமாக சிக்கினர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை அழைத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, அதில் ஒருவர், மீனாட்சிசுந்தரம்; மற்றொருவர் புளியந்தோப்பு வழுக்கை கார்த்திக் (24) என்பது தெரியவந்தது.
இதற்கிடையே, அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மீனாட்சி சுந்தரத்திற்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், போலீசார் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்போடு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்றிரவு 7 மணி அளவில் போலீசாரின் காவலையும் மீறி ரவுடி மீனாட்சிசுந்தரம் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தப்பி ஓடிய ரவுடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.