தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை.
முகநூலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்ட வழக்கில் மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை.
'காஜிமார் தெருவில் தூங்கா விழிகள் ரெண்டு' என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஐஎஸ்எஸ் உள்ளிட்ட அடிப்படை பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், மத நல்லிணக்கத்துக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாகவும் மதுரையை சேர்ந்த முகமது இக்பால் என்பவருக்கு எதிராக தமிழக காவல்துறை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
மேலும் இக்பால், கடந்த ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலானாய்வு முகமைக்கு நேற்று மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, மதுரையில் நான்கு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காஜிமார் தெரு, கே. புதூர், பெத்தானியாபுரம், மெகபூப்பாளையம் ஆகிய நான்கு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், லேப்டாப், மொபைல் போன்கள், சிம் கார்டுகள், பென் டிரைவ், புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.