சாத்தான்குளம் கொலை வழக்கு: மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ் அவரது மகன் பெண்ணிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டுமென ஜெயராஜின் மனைவி செல்வராணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஏற்கனவே மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க இயலவில்லை. எனவே விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தற்போது விசாரணையின் நிலை மற்றும் விசாரணையை முடிக்க போகும் காலமாகும் எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.