108அம்புலன்ஸ் காலதாமதம்
மதுரையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 30 கிலோமீட்டர் தூரம் சரக்கு ஆட்டோவில் கொரோனோ நோயாளி அழைத்து வரப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பாலமேடு அருகே மூடுவார்பட்டியை சேர்ந்த பரணிமுத்து என்ற 31 வயதுடைய நபர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்து வந்த நிலையில் இன்று திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்ட போது ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஏற்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, கிராமத்தில் இருந்த சரக்கு ஆட்டோவில் 30 கிலோமீட்டர் தூரம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை கொரோனோ சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
ஏற்கனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை, நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காமை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது 108 ஆம்புலன்ஸ் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளி வந்திருக்கிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென் மாவட்ட மக்கள் அனைவரின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. எனவே, சென்னைக்கு நிகரான மருத்துவ கட்டமைப்பை மதுரையிலும் ஏற்படுத்த வேண்டும், அரசி மதுரைக்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், ஒரு கொரோனா நோயாளி சரக்கு வாகனத்தில் 30 கிலோ மீட்டர் அழைத்து வரப்பட்டுள்ள சம்பவம் மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.