கபடி போட்டி பார்வையாளர்களுக்கு முக கவசம் கட்டாயம் :மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை கபடி போட்டி வீரர்கள் மீது குற்றவழக்கு இருக்கக்கூடாது; பார்வையாளர்களுக்கு முக கவசம் கட்டாயம் என நீதிமன்றம் ஆணை
கபடி வீரர்கள் மீது குற்றவழக்குகள் இருக்கக்கூடாது எனவும், போட்டியை பார்வையிடும் ரசிகர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், சிலைமானைச் சேர்ந்த விஷ்ணு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், புளியங்குளத்தில் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் கபடி போட்டி நடத்த முடிவு செய்துள்ளோம்.இதற்கு அனுமதி கோரியும், போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரியும் சிலைமான் போலீசில் மனு அளித்தோம்.இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே, கபடி போட்டி நடத்த அனுமதிக்குமாறும், உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது.
கபடி போட்டி நடத்த அனுமதிக்கப்படுகிறது.மனுதாரர் மற்றும் பங்கேற்பாளர் உள்ளிட்டோர் எந்தவித அரசியல், ஜாதி, மதம் குறித்தோ, தலைவர்கள் குறித்தோ கோஷமிடக் கூடாது. போட்டி நடக்கும் இடத்தில் 2 டாக்டர்கள் இருக்க வேண்டும்.போட்டிகளில் பங்கேற்போரின் உடைகளில் அரசியல் மற்றும் ஜாதி தலைவர்களின் படமோ, வாசகங்களோ இருக்கக் கூடாது. ஜாதி, மதம் தொடர்பான பாடல்களோ, பிளக்சோ இடம் பெறக்கூடாது.
குறிப்பாக கபடியில் பங்கேற்கும் வீரர்கள் மீது எந்தவித குற்ற வழக்கும் இருக்க கூடாது.அப்படி இருப்போர் பங்கேற்க கூடாது.போலீசார் அனுமதிக்கும் நேரத்தில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.பங்கேற்பாளர்கள் எந்தவிதமான மது வகைகளும் அருந்தி இருக்கக்கூடாது.மாவட்ட சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இருவர் நடுவர்களாக இருக்க வேண்டும்.கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.