வங்கி அலட்சியத்தால் 636 பேர் பாதிப்பு
மேலுார் கூட்டுறவு நகர வங்கியில் தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யாமல் அலைக்கழிப்பதாக வங்கி அதிகாரிகள் மீது பயனாளிகள் குற்றச்சாட்டு
மேலுார் கூட்டுறவு நகர வங்கியில் உறுப்பினராக இருந்து 2021 மார்ச் 31 வரை 5 பவுன் வரை நகை வைத்து கடன் வாங்கியவர்களுக்கு தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டது. திண்டுக்கல் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 636 பேர் ரூ. 2 கோடி மதிப்புள்ள நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டது.
அனைத்து வங்கிகளிலும் தள்ளுபடி செய்த நிலையில் இவ்வங்கியில் இதுவரை தள்ளுபடி செய்யவில்லை.
இது குறித்து பயநாளிகள் கூறியதாவது: அரசு விதிகளின் படி அரசு ஊழியரோ, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகை வைத்திருந்தவரோ பயிர்கடன் தள்ளுபடி பட்டியலில் பயனடைந்திருந்தால் நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறமாட்டார்கள்.ஆனால் இங்கு அனைவரும் விவசாய கூலி வேலை பார்ப்பவர்கள். தகுதி இருந்தும் அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு மேலாக அலைக்கழிக்கின்றனர்.
வேலைக்கு செல்ல இயலாமல் வங்கியில் காத்து கிடக்கிறோம். அதிகாரிகளை கேட்டால் உத்தரவு வரவில்லை என்பதால் மதுரை அலுவலகத்தில் கேட்கும்படி சொல்கின்றனர் என்றனர்.
வங்கி அதிகாரிகள் கூறுகையில், ''பயனாளிகள் பட்டியலை உயரதிகாரிகளுக்கு அனுப்பி விட்டோம். ஆனால் 2021 மார்ச் 25 முதல் மார்ச் 31 வரை 7 நாட்களில் நகைக் கடன் வைத்திருக்கும் 6 பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்யும்படி தவறுதலாக வந்துள்ளது. இக்குளறுபடி குறித்து ஆய்வு செய்ய 4 பேர் குழுவை அரசு அமைத்துள்ளது'' என்றனர்.